குமரிக் கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் டிசம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 18-ம் தேதி பகல் வரை அதி கனமழை பெய்தது. இந்த 4 மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் வெள்ளம் சூழ்ந்தது. இதில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு போர்க்கால அடிப்படையில், மீட்பு பணிகளையும் நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தி.மு.க மாநில துணை செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி-யுமான கனிமொழி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம் உளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து, கனிமொழி எம்.பி தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் வெள்ளத்தால் பல இடங்களில் சாலைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. இதனால், அந்த பகுதிகளை அணுகுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், வெள்ளத்தால் சின்னாபின்னமான தூத்துக்குடி ஏரல் பகுதிக்கு கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளதால் தி.மு.க எம்.பி கனிமொழி பைக்கில் சென்று வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். கனிமொழி பைக்கில் பின்னால் அமர்ந்து சென்று ஆய்வு செய்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“