/indian-express-tamil/media/media_files/2025/10/26/kabbadi-karthika-2025-10-26-15-28-53.jpg)
ஆசிய போட்டியில் அசத்திய சென்னை புயல்: கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு உற்சாக வரவேற்பு
பஹ்ரைனில் சமீபத்தில் நிறைவடைந்த ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் (Asian Youth Games 2025) இந்திய மகளிர் கபடி அணி, இறுதிப் போட்டியில் ஈரானை 75-21 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தித் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. உலக அரங்கில் நாட்டுக்குப் பெருமை சேர்த்த இந்த அணியில், துணை கேப்டனாக இருந்து அணி வெற்றி பெற முக்கியப் பங்காற்றியவர் சென்னையின் கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா ஆவார். ஏழ்மையான குடும்பப் பின்னணியிலிருந்து வந்து, வறுமையின் பிடியிலும் வளர்ந்து, தனது அசத்தலான ஆட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பி பார்க்க வைத்துள்ள இந்தக் 'கண்ணகி நகர் கார்த்திகா' குறித்த தகவல்கள் கவனம் பெறுகின்றன.
கார்த்திகா வசிக்கும் கண்ணகி நகர், சென்னையின் தெற்கே அமைந்துள்ள புறநகர் பகுதியாகும். சென்னையின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த பூர்வகுடி மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அவர்கள் வாழ்வதற்காக 2000-ல் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதி இது. கண்ணகி நகரில் தற்போது 23,704 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வாழும் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்கள் மற்றும் சென்னை மாநகரைத் தூய்மைப்படுத்தும் தூய்மைப் பணியாளர்களாக உள்ளனர்.
இத்தகைய ஏழ்மையான சூழலில் பிறந்தவர்தான் கார்த்திகா. இவரது தந்தை ரமேஷ் சென்டரிங் வேலை செய்து வருகிறார். இவரது தாய் சரண்யா முன்னர் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றியவர். தற்போது குடும்பச் சுமையைத் தாங்க ஆட்டோ ஓட்டி வருகிறார். வறுமையின் பிடியில் வளர்ந்தாலும், தனது விடாமுயற்சியால் கார்த்திகா ஆசிய அளவில் சாதித்து, தனது குடும்பம் மற்றும் கண்ணகி நகர் பகுதிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும் சமூகநீதி மண்ணான தமிழ்நாடு பெருமை கொள்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
#AsianYouthGames2025: தமிழ்நாட்டுத் தங்கங்களுக்கு ஊக்கத்தொகையுடன் உற்சாக வரவேற்பு! 🥇🥇
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) October 26, 2025
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நம் கபடி வீரர்கள் கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை திரும்பியதும்,… pic.twitter.com/Fzda3y0KQa
ஆசிய இளையோர் விளையாட்டு போட்டி 2025: தமிழ்நாட்டுத் தங்கங்களுக்கு ஊக்கத்தொகையுடன் உற்சாக வரவேற்பு! பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நம் கபடி வீரர்கள் கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை திரும்பியதும், நேராக எனது இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டி, இருவருக்கும் தலா 25 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கினேன்.
கண்ணகி நகருக்கு நான் சென்றபோதெல்லாம் அங்கு வசிக்கும் மக்கள் என்னிடம் வைத்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றித் தர உத்தரவிட்டிருந்ததை நினைவுகூர்ந்து, "உங்க ஏரியாவில் இப்ப பிரச்னைகள் தீர்ந்திருக்கா?" என்று கார்த்திகாவிடம் கேட்டேன். கடந்த 4 ஆண்டுகளில் பெருமளவில் கண்ணகி நகர் முன்னேறியிருப்பதாகப் புன்னகையோடு சொன்னார்.
கார்த்திகா அவர்களும் அபினேஷ் அவர்களும் மேலும் சில உதவிகளையும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவற்றையும் நிறைவேற்றித் தருவோம். நேற்று நான் பைசன் காளமாடனில் கண்ட மணத்தி கணேசன் தொடங்கி, இன்று அபினேஷ், கார்த்திகா வரை எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும் சமூகநீதி மண்ணான தமிழ்நாடு பெருமை கொள்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு மேம்பாட்டு ஆனையத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக முதல்வர் ஸ்டாலினை சென்று சந்தித்தனர். அப்போது இருவரையும் பாரட்டிய முதல்வர், இருவருக்கும் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us