மூன்று கடல்கள் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் இருந்து புனித நீர் எடுக்கப்பட்டு அயோத்தி கொண்டுச் செல்லப்படுகிறது.
நீண்ட கால அயோத்தி நில விவகாரம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது கட்டுமான பணிகள் முடிவடைந்து இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகிறது. இதனையடுத்து புதிய ராமர் கோவில் திறப்பு விழா ஆங்கில புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரி திங்கள் 22 ஆம் நாள் நடைபெற உள்ளது.
இந்தநிலையில், தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் ராமேஸ்வரம் கடலில் இருந்து சிறு குடங்களில் புனித நீர் எடுத்து அயோத்தி அனுப்பும் பணியை விஷ்வ இந்து அமைப்பு ஏற்பாடு செய்தது.
அதன்படி, இன்று (டிசம்பர் - 9) காலை கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலை பூஜைக்கு பின் சிறிய ஐந்து சில்வர் குடங்களில் புனித நீர் எடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பன்றிமலை ஆஸ்ரமத்தை சேர்ந்த சாமி சைத்தன்னிய மகாராஜ், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் பா.ஜ.க.,வை சேர்ந்த எம்.ஆர். காந்தி, நாகர்கோவில் மாநகராட்சி பா.ஜ.க உறுப்பினர் முத்துராமன், விஷ்வ இந்து பரிஷத்தை சேர்ந்த காளியப்பன் மற்றும் பா.ஜ.க.,வை சேர்ந்த பல்வேறு பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.
பின்னர் ஐந்து கலசங்களில் எடுக்கப்பட புனித நீரை கடற்கரை பகுதியில் இருந்து பகவதியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டுச் சென்றனர். தொடர்ந்து பகவதியம்மன் சன்னிதானத்தில் புனித நீர் அடங்கிய 5 குடங்களையும் வைத்து அர்ச்சனை செய்தனர்.
இந்த, புனித நீர் குடங்கள் முழுமையாக அடைக்கப்பட்டு ஃபிளைவுட் பெட்டியில் வைத்து, தொடர் வண்டியில் பார்சல் மூலம் அயோத்திக்கு அனுப்ப இருப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“