த.இ.தாகூர்., குமரி மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லையான களியக்காவிளை பகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் பொதுமக்களுடன் காங்கிரசார் 100-க்கும் மேற்பட்டோர் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லையான களியக்காவிளை கோழிவிளை பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சோதனை சாவடி அருகே பாருடன் டாஸ்மாக் கடை செயல்பட்டு வரும் நிலையில், அந்த பகுதியில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் கோயில், தேவாலயம், மசூதி உட்பட வழிபாட்டு தலங்களுக்கு செல்வோர் மற்றும் குடியிருப்பு பகுதி மக்கள் என பலரும் பல வித இடையூறுகளை சந்திக்கின்றனர்.
இந்த பகுதியில் இரு மாநில மது பிரியர்களும் மது குடிக்க வருவதால் அந்த பகுதியில் வாகனங்களை நிறுத்தும் நிறுத்துகின்றனர். இதன் காரணமாக சோதனை சாவடியில் சோதனைக்காக நூற்றுக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் தேங்கி நிற்பதால் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பல வித பாதிப்புகளை சந்திக்கின்றனர்.
மேலும் மது பிரியர்கள் அரை நிர்வாணமாக இந்த பகுதியில் பெண்களிடம் சில்மிசனில் ஈடுபடும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. இந்த டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் காங்கிரசார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பல வித போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த டாஸ்மாக் கடையில் மருத்துவர் ஒருவர் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
அந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியினர் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தியபோது இருபது நாட்களில் கடைகள் அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் இன்று வரை கடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், அவர்களை கண்டித்து காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில் காங்கிரசார் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கட்பட் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் காங்கிரசார் பங்கேற்றுள்ளனர். கூட்டணி கட்சிகளின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது டாஸ்மாக் கடையை சுற்றி பலத்த போலீஷ் பாதுகாப்பு போடபட்டு உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“