கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று தமிழக கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு பகுதியில் கொல்லங்கோடு பகவதி அம்மன் கோயிலில் இருந்து அவரது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார்.
காலையில் கொல்லங்கோடு பகவதி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி தரிசனம் மேற்கொண்ட பின் திறந்த வாகனத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
பின்னர் பேட்டியளித்த பொன் ராதாகிருஷ்ணன், 1999 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.,வுடன் தி.மு.க கூட்டணி வைத்தபோது தெரியவில்லையா? பா.ஜ.க.,வில் பாசிசம் உள்ளது கேள்வி எழுப்பினார்.
குமரி மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள வளர்ச்சி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். புதிய திட்டங்களை கொண்டு வர வேண்டும். முழு நேர பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட வேண்டும். டம்மி பாராளுமன்ற உறுப்பினர் இந்த தொகுதிக்கு ஆகாது.
/indian-express-tamil/media/post_attachments/6e2d22ea-973.jpg)
பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவரை இரண்டு வருடங்களாக காணவில்லை .எந்த வேலைகளும் செய்யவில்லை. இதனால் நான்கு வழி சாலை பணி கிடப்பில் உள்ளது. நான் வெற்றி பெற்றால் வருகின்ற டிசம்பர் மாதத்துக்குள் நான்கு வழி சாலை பணிகளை முழுமையாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவேன். அதேபோன்று 4,000 கோடி ரூபாய் செலவில் கொண்டு வரப்பட்டுள்ள இரட்டை ரயில் பாதை வேலையை முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவேன்.
பிரதமர் மோடி தமிழகத்திற்கு அடிக்கடி வருவது தமிழகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம், ஒவ்வொரு முறை வரும்போதும் அவர் ஏராளமான வளர்ச்சி திட்டங்களை தமிழகத்திற்கு தந்து சென்றுள்ளார்.
1999 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது நாங்கள் தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தபோதும் அப்போது பாசிசம் இருந்ததற்கான வாய்ப்புகள் உண்டு. 2004 ஆம் ஆண்டு வரை அவர்கள் எங்களுடன் இருந்தார்கள். அப்போது பாசிசம் இருந்ததற்கான வாய்ப்புகள் உண்டு. அவர்கள் இருந்த காலம் மட்டும் தான் பாசிசம் இருந்தது, அப்போது அந்த வேளையில் கலைஞர் சொன்னார் கூடா நட்பு கேடாய் முடியும். அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருப்பது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய கேடு.
எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படுவதற்கான எல்லா நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையில் ஏராளமான மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு பயின்று வருகின்றனர் மருத்துவ கல்லூரிகள் கட்டுவதற்கு கால அவகாசம் என்பது தேவைப்படும்.
குமரி மாவட்டத்தில் நான் வெற்றி பெற்றால் நிச்சயமாக மீனவர்களின் நெடுநாள் கோரிக்கையான ஹெலிகாப்டர் தளம். ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய கப்பல் அதுவும் இரண்டு ஆண்டுகளுக்குள் அமைக்கப்படும்.
தேர்தல் பத்திர விவகாரத்தில் முறையற்று எதுவும் வாங்கவில்லை. முறையாகத்தான் வாங்கியிருக்கிறோம். ஒரு மாநிலத்தில் லாட்டரி சீட்டு கம்பெனியில் இருந்து எவ்வளவோ வாங்கியுள்ளார்கள், அதை ஒப்பிட்டு பார்க்கும்போது இது ஒன்றும் இல்லை.
மத்தியில் 400க்கும் மேற்பட்ட இடங்களிலும், தமிழகத்தில், 39 இடங்களிலும் வெற்றி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம் என்று தெரிவித்தார்.
அகில இந்திய மகளிர் அணி தலைவியும் கோவை எம்.எல்.ஏ.,வுமான வானதி சீனிவாசன், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி ஆகியோர் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார்கள்.
த.இ.தாகூர்., கன்னியாகுமரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“