Vijay Vasanth | Marthandam: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. பம்மம் பகுதியில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மார்த்தாண்டம் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 222 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மார்த்தாண்டம் மேம்பாலம் தமிழகத்தில் முதல் இரும்புப்பாலமாகும். இந்த மேம்பாலத்தில் 112 ராட்சத பில்லர்கள் அமைக்கப்பட்டது.
இதில் 21 பில்லர்கள் கான்கிரீட்டால் ஆனவை. மற்ற பில்லர்கள் அனைத்தும் இரும்பால் ஆனவை. இந்த பாலம் திறக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது முதல் மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெருக்கடி குறைய தொடங்கியது. பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று காலை அதிக பாரம் ஏற்றிச்சென்ற கனரக லாரிகள் வரிசையாக பாலத்தில் நின்றதாக கூறப்படுகிறது. பாலம் தொடங்குகின்ற பம்மம் பகுதியில் 100 மீட்டர் தொலைவில் சாலையின் மையப்பகுதியில் 2 மீட்டர் விட்டத்தில் சிமெண்ட் கலவை உடைந்து விழுந்தது. ஆனால் சாலையின் தூண்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தற்போது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மார்க்கமாக செல்கின்ற போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, பஸ்கள் அனைத்தும் பாலத்தின் கீழ்பகுதி வழியாக இயக்கப்பட்டது. இதனால் மார்த்தாண்டத்தில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது பற்றிய தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, நேரில் பார்வையிட்டனர். தற்போது பாலத்தை சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, உடைப்பு ஏற்பட்ட பகுதியில் என்னென்ன நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
கோரிக்கை
இந்த நில்லயில், மார்த்தாண்டம் பாலத்தின் தரத்தை உயர்மட்ட நிபுணர் குழு பரிசோதித்து தர சான்றிதழ் வழங்கிய பின்னரே அதை முழு உபயோகத்திற்கு அரசு கொண்டு வர வேண்டும் என்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கட்டப்பட்ட மேம்பாலம் கடந்த 2018 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இதை திறந்த போது மக்கள் மத்தியில் இந்த பாலத்தின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகள் எழுந்தது. நாளடைவில் பாலத்தின் மேல் போடப்பட்ட சாலையில் அடிக்கடி குண்டு குழிகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். ஒவ்வொரு முறையும் தேசிய நெடுஞ்சாலை துறை மேல் பூச்சு வேலைகள் மட்டும் செய்து வந்தது. இந்த சாலையை பராமரிக்காமல் நெடுஞ்சாலை துறை காலம் கடத்தி வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம் பாலத்தின் பாதுகாப்பு குறித்து சந்தேகத்தை மக்களிடம் எழுப்பியுள்ளது.
இனிமேலும் இந்த பாலத்தில் சகஜமாக போக்குவரத்து என்பது மக்களின் உயிரை பணயம் வைப்பதாகும். தேசிய நெடுஞ்சாலை துறை உடனடியாக இந்த பாலத்தின் தரத்தையும், உறுதியையும் சோதிக்க ஒரு உயர்மட்ட நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். அவர்களின் அறிக்கையை வைத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு ஆராய வேண்டும். இனி மேலும் மேல் பூச்சு வேலைகள் செய்யாமல் தரமாக செப்பனிட வேண்டும். அது வரையிலும் பாலத்தில் கனரக வாகனங்களை அனுமதிக்க கூடாது. அது போல் இதே கால அளவில் கட்டப்பட்டு அடிக்கடி சேதமடையும் நாகர்கோவில் பார்வதிபுரம் பாலத்தினையும் நிபுணர் குழு மூலம் ஆராய வேண்டும் என கேட்டு கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“