நாகர்கோவிலை அடுத்த மேலகிருஷ்ணன்புதூரில் இருந்து ஈத்தாமொழி செல்லும் சாலையில் மொபட்டில் டீ வாங்கச் சென்ற 10 ஆம் வகுப்பு பயிலும் அஜாஸ் (15) மீது கார் ஒன்று மோதியது. வாகனத்தின் முன் பகுதியில் மொபட்டும் சிறுவனும் சிக்கியதை பார்க்காத கார், நிற்காமல் மிக வேகமெடுத்து தறிகெட்டு ஒடியது.
விபத்து நடந்த இடத்தில் விபத்தை பார்த்தவர்கள் வேகமாக செல்லும் வாகனத்தை இரு சக்கர வாகனத்தில் பின்னால் சென்று நிறுத்து சொல்லி குரல் எழுப்பியுள்ளனர். இதனை பார்த்த வாகன ஓட்டி காரில் மொபட்டும், சிறுவனும் சிக்கிய நிலையில் வாகனம் இழுத்து செல்வது தெரியாமல், பின்னால் வருபவர்கள் தம்மை தாக்க வருவதாக கருதி முன்னிலும் வேகமாக 2.கி.மீ தூரம் ஓட்டிச் சென்று சங்குத்துறை கடற்கரை பகுதியில் போய் நின்றார்.
வேகமாக ஓடிய வாகனத்தில் சிக்கிய, சிறுவனின் உடலில் இருந்து வெளியான ரத்தம் சாலை முழுவதும் நீண்ட கோடாக சிவப்பாக பதிந்திருந்தது. சங்குத்துறை போய் நின்ற வாகனத்தில் வாகனத்தை ஓட்டிய கோபி, அவரது மனைவி மற்றும் குடும்பத்தாரை வாகனத்தில் இருந்து இறக்கி விட்டுவிட்டு அங்கிருந்து தலைமறைவாக முயன்றவரை காவல்துறை மடக்கி பிடித்தது.
கண் இமைக்கும் நேரத்தில் கார் குபிரென்று தீ பற்றி எறியத் தொடங்கியது. இதனை காரில் வந்த கோபியின் குடும்பத்தாரும், காரை துரத்தி வந்தவர்களும் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டு நின்றனர். சம்பவம் இடத்திற்கு வந்த தீ அணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் எறிந்த தீயை அணைத்தனர். கன்னியாகுமரி உதவி ஆணையர் மகேஷ் குமார் மற்றும் சுசீந்திரம் காவல்துறையினர் வாகனத்தின் ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் விபத்தில் கொடூரமாக மரணம் அடைந்த அஜாஸ்யின் தெற்கு சூரங்குடியை சேர்ந்த அபுபக்கர் சித்திகின் மகன் ஆவார். மரணம் அடைந்த அஜாஸ்க்கு ஒரு அண்ணனும் தம்பியும் உள்ளனர். விபத்தில் மரணம் அடைந்த அஜாஸ்யின் தந்தை கோயில் திருவிழா நடக்கும் இடங்களில் மிட்டாய் கடை நடத்தி வருவது வாடிக்கை.
புத்தன் துறையில் ஒரு ஆலய விழாவில் மிட்டாய் கடை போட்டுள்ள நிலையில், நேற்று (பிப்ரவரி 11) பள்ளி விடுமுறை என்பதால் அப்பாவுக்கு உதவியாக கடையில் நின்ற அஜாஸ் மாலை அனைவருக்கும் டீ வாங்க கடைக்கு மொபட்டில் சென்ற நிலையில் இந்த விபத்து ஏற்பட்டு கொடூரமாக மரணம் அடைந்தான். பள்ளி மாணவனின் கொடூர மரணம் குமரி மாவட்டத்தையே சோகமடைய செய்துள்ளது.
த.இ.தாகூர்., குமரி மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“