கன்னியாகுமரியில் ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்த சிறுவன் மரணமடைந்த நிலையில், குற்றவாளிகள் பற்றிய விவரம் தெரியாமல், சிறுவனின் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது. இந்தநிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம், மெதுகும்மல் ஊராட்சி அனந்தனகர் பகுதியில் செயல்படும் மயா கிருஷ்ண வித்யாலய உயர்நிலை பள்ளியில், அப்பகுதியைச் சேர்ந்த அஸ்வின் என்ற மாணவர் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இதையும் படியுங்கள்: ஆதீன மடங்கள் இந்து சமய அறநிலைத்துறைக்கு கட்டுப்பட்டவை – உயர் நீதிமன்ற மதுரை கிளை
இந்தநிலையில், கடந்த மாதம் 24 ஆம் தேதி பள்ளியில் தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு செல்ல பள்ளி வளாகத்தை விட்டு வெளியே நடந்து வந்து கொண்டிருந்தபோது அதே பள்ளி சீருடை அணிந்த மாணவன் ஒருவன், அஸ்வினுக்கு குளிர் பானம் ஒன்றை கொடுத்து குடிக்கச் சொல்லியுள்ளார். இதனையடுத்து, அஸ்வின் குளிர்பானத்தை குடிக்க தொடங்கியதும், இன்னொரு மாணவன் அஸ்வினை கீழே தள்ளி விட்டதால் குளிர்பானம் பாட்டில் கீழே விழுந்தது. இதனால், அஸ்வின் எப்போதும் போல் வீட்டிற்கு சென்றுவிட்டான். பள்ளி வளாகத்தில் நடந்த எதையும் பெற்றோர்களிடம் சொல்லவே இல்லை.
இரவு நேரத்தில் சிறுவன் அஸ்வினுக்கு குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் சிறுவனை மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்து மருந்து வாங்கி வந்துள்ளனர்.
மருந்து உட்கொண்ட பின்னும் சிறுவனுக்கு காய்ச்சல் குறையாத நிலையில், சிறுவனின் வாய், உதடு பகுதிகளில் புண்கள் ஏற்பட்டுள்ளதை கண்டு, பெற்றோர் மகனை நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை செய்த போது, சிறுவன் அஸ்வின் அருந்திய குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது என தெரியவந்ததுடன், சிறுவனின் இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்து இருந்தது தெரியவந்தது.
இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர்கள் மருத்துவ சோதனைக்கு பின், களியக்காவிளை காவல் துறையிடம் புகார் கொடுத்தனர். சிறுவன் அஸ்வினின் வீட்டிற்கு சென்ற காவல்துறை யினர், அஸ்வினிடம் பள்ளியில் என்ன நடந்தது என விசாரித்தனர். அப்போது அஸ்வின், ”எங்கள் பள்ளி சீருடை அணிந்த மாணவன் ஒருவன் குளிர் பானம் குடி என சொல்லி தந்தான், நான் சில மடக்குகள் குடித்த நிலையில், எங்கள் பள்ளியில் பயிலும் இன்னொரு மாணவன் குளிர் பானத்தை தட்டி விட்டான்” என கூறினான்.
பின்னர் குளிர் பானம் தந்த மாணவனை பார்த்தால் தெரியுமா என காவல்துறையினர் கேட்க, தெரியும் என அஸ்வின் கூறியுள்ளான். அடுத்ததாக, குளிர் பானம் தந்தவன், தமிழிலில் பேசினானா, அல்லது மலையாளத்தில் பேசினானா என்ற கேள்விக்கு, தமிழில் தான் பேசினான் என அஸ்வின் கூறியுள்ளான். மேலும், குளிர் பானம் குடித்ததை அம்மா, அப்பாவிடம் கூறினாயா? என காவல்துறை கேட்டதற்கு, பயந்து சொல்லவில்லை என அஸ்வின் கூறியுள்ளான்.
இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிறுவனுக்கு குளிர் பானம் கொடுத்த சக மாணவனை காவல்துறை கண்டு பிடிப்பதில் தாமதம் காட்டியதை கண்டித்து, கிள்ளியூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ் குமார் மற்றும் அந்த பகுதியை சார்ந்த பொது மக்களும். ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்பாட்டம் நடத்தினர். பின்னர், காவல்துறை சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்யாது காலம் தாழ்த்துவதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்திடம் புகார் கொடுத்தனர்.
காவல்துறை இதில் ஒரு மென்மையான நிலையை பின் பற்றி குற்றவாளியை கண்டறிவதில் மெத்தனம் காட்டுகிறது என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவிய நிலையில், அஸ்வினுக்கு தொடர்ந்து கொடுக்கப்பட்ட சிகிச்சை பயன் இல்லாது அஸ்வின் (11) கடந்த 17 ஆம் தேதி மரணம் அடைந்தான். சிறுவனின் உடல் உடற்கூறு சோதனைக்காக, நாகர்கோவில் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குளச்சல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ், சிறுவன் அஸ்வின் மரணத்திற்கு காரணமான குற்றவாளியை உடனடியாக கண்டுபிடித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதனிடையே, குற்றவாளிகளை கைது செய்யும் வரை மருத்துவ பரிசோதனைக்கு பின் தங்கள் மகனின் பூத உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர்கள், உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
காவல் துறையின் பொறுப்பற்ற தன்மையை கண்டித்து, சிறுவன் மரணத்திற்கு பின்னும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் போராட்டம் நடத்திய நிலையில், வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சிறுவன் அஸ்வின் மரணத்திற்கு பின் சம்பந்தப்பட்ட பள்ளி உரிய சான்றிதழ் இல்லாமல் இத்தனை காலம் செயல்பட்டு வந்துள்ளது என்ற அதிர்ச்சி உண்மை தற்போது வெளிவந்துள்ளது.
த.இ.தாகூர், கன்னியாகுமரி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil