கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த படந்தாலுமூடு சோதனை சாவடியில் நேற்று இரவு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் திடீரென சுட்டுக்கொல்லப்பட்டார். இரவு 10 மணியளவில் சோதனை சாவடிக்கு குல்லா அணிந்த 2 வாலிபர்கள் சென்று பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனுடன் தகராறு செய்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடி காரில் ஏறி சென்று விட்டனர்.
இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பரவியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சோதனை சாவடி அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அதிகாரிகள் போட்டு பார்த்து விசாரணை நடத்தினர். அப்போது குற்றவாளிகள் தப்பி ஓடும் பரபரப்பான வீடியோ காட்சிகள் சிக்கியது. அதனை கைப்பற்றி தப்பி சென்ற கொலையாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
சோதனை சாவடி அருகே ஒரு கார் வந்து நிற்பது கேமராவில் பதிவாகி உள்ளது. காரில் இருந்து குல்லா அணிந்த 2 பேர் இறங்கி சோதனை சாவடியை நோக்கி செல்வதும், சில வினாடிகளில் மீண்டும் காரை நோக்கி அவர்கள் ஓடி செல்வதும் பின்னர் காரில் ஏறி தப்பி செல்வதும் தெளிவாக வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகளை வைத்து குற்றவாளிகளை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் குறித்த செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்