த.இ.தாகூர் - குமரி மாவட்டம்.
maldives | kanyakumari | fishermen: கன்னியாகுமரி மாவட்டம் தூத்துறைச் சேர்ந்த பைஜு என்பவர் 'புனித அந்தோணியார்' என்ற விசைப்படகு மூலம் மீன்பிடி தொழில் ஈடுபட்டு வருகிறார். இவரது படகில் குமரியைச் சேர்ந்த 7 மீனவர்களும், பாண்டிச்சேரி கடலூரை சேர்ந்த 2 மீனவர்களும், அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 மீனவர்களும், கேரளத்தை சேர்ந்த ஒரு மீனவர் என மொத்தம் 12 மீனவர்கள் ஆகஸ்ட் 7ம் தேதி தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு சென்ற இழுவை கப்பல் மீனவர்களின் விசைப்படகு மீது மோதியது. இதனால் விசைப்படகு நடுகடலில் மூழ்கியது. அதில் இருந்த 12 மீனவர்களும் கடலிலே தத்தளித்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய இழுவை கப்பல் 12 மீனவர்களை மீட்டு மாலத்தீவுக்கு கொண்டு போய் சேர்த்தது.
இந்த 12 மீனவர்களையும் விசாரணை கைதிகளாக மாலத்தீவு டிட் ண்சன் சென்டரில் வைத்திருந்தனர். மாலத்தீவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விரைந்து சென்று 12 இந்திய மீனவர்களையும் சந்தித்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர். பின்னர் மீனவர்கள் தாயகம் திரும்புவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, அவர்களது பயணச் செலவையும் மாலத்தீவு இந்திய தூதரக அதிகாரிகளே ஏற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், 12 மீனவர்களும் நேற்று மதியம் விமான மூலம் மாலதீவில் இருந்து மும்பை வந்து சேர்ந்தனர். மீண்டும் அங்கிருந்து விமானம் மூலம் இரவு 9 மணிக்கு மணிக்கு திருவனந்தபுரம் வந்து சேர்ந்தனர். அதன்பின்னர், சாலை மார்க்கமாக அவர்கள் தங்களது இல்லங்களுக்கு வந்து சேர்ந்தனர்.
இந்த நிலையில், தாயகம் திரும்பிய 12 மீனவர்களும் தங்களுக்கு உதவிய மாலத்தீவு இந்திய தூதரக அதிகாரிகளுக்கும், மத்திய அரசு மற்றும் தமிழக அரசுகளுக்கும் தங்களின் நன்றிகளை தெரிவிப்பதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' தமிழிடம் கூறினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“