திருச்சி தனியார் மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவர்கள், உடன் பணிசெய்யும் மருத்துவரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்று விட்டு நேற்று (மே 6) காலையில் கன்னியாகுமரியில் சூரியன் உதிக்கும் காட்சியை பார்க்க சென்றனர்.
பிறகு தடைசெய்யப்பட்ட லெமூரி கடற்கரை பகுதிக்கு சென்ற அவர்கள், கடலில் இறங்கி குளித்தனர்.
அப்போது கடலில் ஏற்பட்ட திடீர் பேரலை குளித்துக் கொண்டு இருந்த மாணவர்களை சுருட்டி கடலின் உள் பகுதிக்கு கொண்டு சென்றது.
கடற்கரை பகுதியில் நின்ற மீனவர்கள் விபத்து பற்றி ராஜாக்கமங்கலம் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க, தீ அணைப்பு வீரர்கள், கடலோர காவல்படை, உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் கடல் அலையில் சிக்கிய மருத்துவ மாணவர்களை கடலில் இருந்து மீட்டனர்.
இதில் 5 பேர் மரணம் அடைந்த நிலையில், இரண்டு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசின் பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பயிற்சி மருத்துவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், குமரி மாவட்டத்தில் ஏற்கனவே வானிலை மையம் கடற்கரை பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை வெளியிட்ட தினத்தில் லெமூரி கடற்கரை பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது என எச்சரித்து இருந்த போதும், தனியார் இடத்தின் வழியாக கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளனர். குறிப்பிட்ட கடல் பகுதி எப்போதும் சீற்றம் நிறைந்த பகுதி.
முதல்வர் மரணம் அடைந்த மருத்துவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளதுடன் மரணம் அடைந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். இப்போது தேர்தல் ஆணையத்தின் கட்டு பாட்டிடம் அனுமதி பெற்று அந்த நிதி வழங்க இருப்பதாக தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“