கன்னியாகுமரி சின்னமுட்டம் மீனவ கிராம மக்கள் கடந்த 17 நாட்களாக, புனித தோமையர் ஆலய வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பெட்ரோல் பங்க் நேற்று முன்தினம் (ஆகஸ்டு 23ம் தேதி) திறக்கப்பட்ட நிலையில், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.
முட்டம் மீனவ கிராமத்து மக்கள் குடும்பம் குடும்பமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, போராட்ட குழு பொறுப்பாளர்கள், குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியின் பிரின்ஸ் உடன் மாவட்டம் ஆட்சியர் ஸ்ரீதரை சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால், மனு கொடுத்த அடுத்த தினமே பெட்ரோல் பங்க் திறக்க பட்டது.
இந்த நிலையில், 17 வது நாளாக போராட்டத்தின் போக்கை மாற்றி, புனித தோமையர் ஆலையம் முற்றத்தில் இருந்து ஆண்கள், பெண்கள் கருப்பு கொடியுடன் ஊர்வலமாக சென்று கடலில் இறங்கி நின்று மதியம் வரை போராட்டம் நடைபெற்றது.
அதன்பின் கடற்கரை சாலையில் இருந்து போராட்டம் நடத்திய நிலையில், காவல்துறை நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின் சாலை பகுதியில் இருந்து மீண்டும் தேவாலயம் முற்றத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க் குறித்து மாவட்ட நிர்வாகம் அமைதி காத்து வருவதாகவும், சின்னமுட்டம் மீனவ கிராம ஒட்டுமொத்த மக்களின் போராட்டத்திற்கு செவிமெடுக்கவில்லை. தங்களின் கோரிக்கை வெற்றி அடையும் வரை போராட்டம் தொடரும் என போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil