கன்னியாகுமரியில் பாரத மாதா, பிரதமர் மோடி குறித்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசிய வீடியோ சர்ச்சையானதைத் தொடர்ந்து, பாஜகவினர் காவல் நிலையங்களில் புகார் தெரிவித்ததையடுத்து, அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் ஜூலை 18ம் தேதி இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பல்வேறு இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தில், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகர் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கலந்துகொண்டு பேசினார் அவர் அந்த நிகழ்ச்சியில் பேசிய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானதைத்தொடர்ந்து அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, தமிழகத்தில் தி.மு.க வெற்றி பெற்றது சிறுபான்மையினர் போட்ட பிச்சை என்று பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. மேலும், பாதிரியர் ஜார்ஜ் பொன்னையா, இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல்தொழில்நுட்பதுறை அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் குறித்துப் பேசிய கருத்துகளும் சர்ச்சையாகியுள்ளன.
மேலும் அந்த வீடியோவில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, பாரதமாதா குறித்தும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுபான்மையினர் ஓட்டுகளை வாங்கி வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் இந்து கோயில்களுக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் தி.மு.க வெற்றி பெற்றது சிறுபான்மையினர் போட்ட பிச்சை. இந்துக்கள் உங்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள். நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி ஓட்டுக்கு இரண்டாயிரம் வீதம் கொடுத்து கிறிஸ்தவ நாடார் ஓட்டை வாங்கி வெற்றி பெற்றார் என்று பேசியுள்ளார்.
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாஜக மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மத மோதலைத் தூண்டும் விதமாக பேசியதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் சுமார் 30 புகார்கள் அளித்துள்ளனர். பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் பல இடங்களில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பாரத மாதா, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறித்து பனவிளை சர்ச் பங்குதந்தையும், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகர் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கூறியிருப்பதாவது: “ அன்புள்ள நண்பர்களே, கடந்த ஞாயிற்றுக்கிழமை அருமனையிலே, குமரி மாவட்டத்தில் கடந்த பல அண்டுகளாக ஆலயங்கள் பூட்டப்படுவது, ஜெபக் கூட்டங்கள் தடை செய்யப்படுவது, பட்டா நிலத்திலே ஆலயம் கட்டுவதற்கு அனுமதி மறுக்கப்படுவது குறித்தும் சமீபத்தில் மரணம் அடைந்த ஸ்டேன் சாமிக்கு அஞ்சலித்துவது இந்த நோக்கோடு ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திலே நான் பேசிய எனது பேச்சு எடிட் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரபரப்படுகிறது. அதிலே எனது வார்த்தைகளில் இந்து சகோதரர்களை உணர்வுகளை புண்படுத்தியதாகவும் நான் என்னுடைய வார்த்தைகள்ல் அவர்களுடைய மதநம்பிக்கையை இழிபடுத்தியதாகவும் என்னுடைய உரையை திரித்து பலர் கூறியுள்ளார்கள். ஆகவே, இதன்வழியாக நானோ என்னுடன் மேடையில் பேசியவர்களோ எந்த மத உணர்வுகளையும் புண்படுத்தும் விதமாக பேசவில்லை. ஒருவேளை என்னுடைய மற்றும் பலருடைய பேச்சுகள் அவ்வாறு என்னுடைய இந்து சகோதர, சகோதரர்களின் மத உணர்வுகளை புண்படுத்தினால் அதற்கு அந்த கூட்டத்தின் சார்பாக எனது மனம் நிறைந்த வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். அது போன்ற வார்த்தைகளை எதிர்காலங்களில் பயன்படுத்த மாட்டோம் என்பதை நான் நேசிக்கின்ற இந்து சகோதர சகோதரிகளுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.