கன்னியாகுமரியில் இன்று பாஜக சார்பில் பந்த் அனுசரிக்கப்படுகிறது. சபரிமலைக்கு சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவமதித்த கேரள காவல்துறையை கண்டித்து இந்தப் போராட்டம் நடக்கிறது.
மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், இரு தினங்களுக்கு முன்பு சபரிமலை சென்றார். அவரை குழுவினருடன் சபரிமலை செல்ல போலீஸ் அனுமதிக்கவில்லை. பிறகு அரசு பஸ்ஸில் புறப்பட்டுச் சென்றார் அமைச்சர். போகும்போதும், வரும்போதும் போலீஸ் அதிகாரிகளுடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
பொன் ராதாகிருஷ்ணனை கேரள போலீஸார் திட்டமிட்டு அவமதித்ததாக கன்னியாகுமரியில் பாஜக சார்பில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. இதனையடுத்து அங்கு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரியிலிருந்து கேரளாவிற்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் பஸ்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்படுகின்றன. முழு அடைப்பால் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று நடைபெற இருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா கட்சியினரின் போராட்டம் காரணமாக தமிழக-கேரள எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பந்த காரணமாக பல இடங்களில் பஸ்கள் மீது கல் வீசப்பட்டது.