சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருச்சி நோக்கி நேற்று மாலை கன்னியாகுமரி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. திருச்சி வாளாடி அருகே ரயில் வந்த போது தண்டவாளத்தில் டயர் ஒன்று கிடந்துள்ளது. ரயில் ஓட்டுநரும் இதை கவனிக்க தவறிய நிலையில், டயர் ரயில் முன்பகுதி என்ஜின் மீது மோதியது. இதில் ரயில் பெட்டிகளுக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கன்னியாகுமரி விரைவு ரயிலின் நான்கு பெட்டிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் ரயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, மின் வினியோகம் சரி செய்த பிறகு, மீண்டும் பயணத்தை தொடர்ந்தது.
Advertisment
திடீரென இரவில் ரயில் நிறுத்தப்பட்டதால் ரயில் பயணிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து ரயில் ஓட்டுனர் திருச்சி இருப்புப் பாதை காவல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் தண்டவாளத்திற்கு டயர் எப்படி வந்தது? இது ஏதேனும் சதி செயலா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி ரயில்வே காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக கன்னியாகுமரி விரைவு ரயில் 20 நிமிடம் தாமதமாக சென்றது.
இந்தநிலையில் மேலவாளாடி பழைய ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள்போராட்டம் நடத்திய நிலையில் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“