Tamil Nadu Rains and Weather : தமிழகத்தில் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம், மற்றும் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து கடலுக்கு மீன்புடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர். 411 விசைப்படகுகள் நேற்று மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக 215 படகுகள் கரை திரும்பின. ரெட் அலர்ட் என்றால் என்ன?
எஞ்சியுள்ள 176 படகுகள் விரைவில் கரை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளா, கர்நாடகா, கோவா, மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற படகுகளும் கரை திரும்பின. போதுமான தகவல்கள் மீனவர்களுக்குக் கிடைக்காததால் ஏராளமானோர் இன்னும் கடலுக்குள் இருக்கின்றனர். அவர்களை கரைக்கு அழைத்து வர மிக விரைவில் ஏற்பாடுகள் செய்யப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி பகுதியில் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றவர்களுக்கு வள்ளவிளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மழை : ரெட் அலர்ட் வாபஸ்
01:00 PM: ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டது
தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் எதிர்பார்க்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்படுகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12:30 PM: கடலூரில் கனமழை
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. காட்டுமன்னார்கோவில், செட்டிதாங்கள், ரெங்கநாதபுரம் கடம்பூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை
11:30 PM: தேசிய பேரிடர் மீட்புக் குழு மதுரை வருகை:
தமிழ்நாட்டில் மழை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மதுரை வந்தனர்.
10.15 am : நெல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் செய்தியாளர்களை இன்று சந்தித்து வருகிறார். நெல்லை மாவட்டத்தில் அதீத மழையால் பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகளாக சுமார் 125 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது என்றும், பேரிடர்களை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாரான நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
10.00 am : வடகிழக்கு பருவமழை : அவசர உதவிக்கு தொலைபேசி எண்களை பகிர்ந்த சென்னை ஆட்சியர்
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளாக 205 இடங்களை கண்டறிந்துள்ளது மாவட்ட நிர்வாகம். வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை ஆட்சியர் சண்முக சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. உதவிகள் தேவைப்படும் மக்கள் 1077 மற்றும் 1913 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
9. 45am : பருவமழையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது தமிழக அரசு – அமைச்சர் வேலுமணி
தமிழகத்தில் துவங்க இருக்கும் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் வேலுமணி கூறியிருக்கிறார்.

9.30am : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை கண்காணிக்க மற்றும் பணிகளை மேற்கொள்ள 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கபட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருப்பதாக காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.
9.10am : குற்றால அருவியில் குளிக்கத் தடை
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்துவரும் கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டம் குற்றால அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

9.00am : தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
சிவப்பு எச்சரிக்கை (Red Alert) விடுக்கப்பட்டுள்ள காரணத்தால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் தனுஷ்கோடிக்கு செல்ல போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது.
8.50am : சென்னைப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை இல்லை
தொடர் மழை காரணமாக நேற்று சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வரும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. ஆனால் நேற்று இரவு அதிக மழை இல்லாத காரணத்தால் இன்று கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை.
8.45am : நீலகிரி மற்றும் தேனி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. திருவாரூர், திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை. தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.
8.30am : புதுச்சேரியில் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகள் விடுமுறை
புதுச்சேரியில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டிருக்கிறார் முதலமைச்சர் நாராயண சாமி.