தமிழ்நாட்டில் நீண்ட கடற்கரையையும், 47 மீனவ கிராமங்களையும் கொண்டது கன்னியாகுமரி மாவட்டம். இங்கு, 1500க்கும் அதிகமான இயந்திரப் படகுகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்த இயந்திரப் படகுகளின் மீன்பிடி துறைமுகங்கள் சின்ன முட்டம், குளச்சல், சேரியாமுட்டம் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படுகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக புயல், மழை எச்சரிக்கை அடுத்தடுத்து விடுக்கப்பட்டு, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தொடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதனால், சின்னமுட்டம் மீன் பிடி துறைமுகத்தில் உள்ள 350க்கும் அதிகமான விசைப்படகுகள் கடந்த மூன்று மாதங்களாக கடலுக்கு செல்லாது படகு துறையில் கட்டப்பட்டு உள்ளன.
இதனால், 2250 மீன் பிடி தொழிலாளர்களின் வருவாய் பாதிக்கப்பட்டு உள்ளது. பல மீனவ தொழிலாளர்களின் குடும்பங்கள் மட்டுமல்லாது கூடையில் வைத்துமீன் விற்பனை செய்யும் சாதாரண பெண்கள் உட்பட மீன் வியாபாரம் செய்வோர் என 5000க்கும் அதிகமானோர் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும், சின்ன முட்டத்தில் உள்ள மிகப் பெரிய மீன் சந்தை, மீன் வரத்து இல்லாததால் அடியோடு மக்களின் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்தப் பகுதியில் நாளொன்றுக்கு ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். தற்போது கடற்கரையில் கட்டப்பட்டுள்ள படகுகளின் ஓசைகள் மட்டும் கேட்கிறது.
மேலும், இயந்திர படகுகள் மட்டுமல்லாது சிறிய வல்லங்களும் கடலுக்கு செல்ல முடியாத நிலையே காணப்படுகிறது. கடலில் என்று அலை ஒய்ந்து எப்போது நீராடுவது என்பது, அவ்வப்போது ஏற்படும் இயற்கை மாற்றத்தால் மீனவர்களின் நிலை உள்ளது.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/