கன்னியாகுமரி, தமிழகத்தின் கடைக்கோடி நாடாளுமன்ற தொகுதி இது. தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் இது 39வது தொகுதி ஆகும்.
ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் பிரபல சுற்றுலா தலமாக இது திகழ்கிறது.
முன்பு நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியாக இருந்த இது, 2009ம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக கன்னியாகுமரி மக்களவை தொகுதி என பெயர் மாற்றம் பெற்றது.
நாகர்கோவில் தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடங்கியிருந்தன.
ஆனால், கன்னியாகுமரி தொகுதியாக பெயர் மாற்றம் பெற்றபோது, திருவட்டார் சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்டது.
தேசியக் கட்சிகளின் ஆதிக்கம்
அதிக கல்வியறிவு கொண்ட மாவட்டமாக இருக்கும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில், கேரளாவைப் போன்றே தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் மேலோங்கி நிற்கிறது. இந்த தொகுதி காங்கிரஸ், பாஜக நேரடியாக மோதும் தொகுதியாக பல தேர்தல்களாக இருந்து வருகிறது.
காங்கிரஸ் கோட்டை
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கோட்டை என்ற பெருமை பெற்றது.
1969 இடைத்தேர்தலிலும், 1971 தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு காமராஜர் வெற்றி பெற்றார்.
1991 தேர்தலுக்குப் பிறகு பிற கட்சிகள் கன்னியாகுமரி தொகுதியைக் கைப்பற்றின. குமரியில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆதரவுடன் தேர்தலை சந்தித்த தமாகா 1996, 1998 தேர்தலில் வெற்றி பெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக தலா ஒரு முறையும், பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் இரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.
சுவாரஸ்யமாக, 1980 முதல் 1998 வரை நடந்த ஆறு தேர்தல்களில் வெற்றி பெற்ற டென்னிஸ், அதிக முறை கன்னியாகுமரி தொகுதியைக் கைப்பற்றியவர் என்ற சிறப்பைப் பெற்றவர். இதில் நான்கு முறை காங்கிரஸ் சார்பிலும், இரண்டு முறை தமாகா சார்பிலும் வெற்றி பெற்றார்.
2019 மக்களவை தேர்தல்
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து போட்டியிட்ட ஹெச். வசந்த குமார் 6,20,594 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அதே நேரம் பாரதிய ஜனதா கட்சியின் பொன். ராதாகிருஷ்ணன் 3,62,976 வாக்குகளே பெற்றார்.
பின்னர் கொரோனா தொற்றால் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வசந்த குமார் காலமானார்.
அதன்பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் இந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடந்தது.
இதில் வசந்த குமார் மகன் விஜய் வசந்த், திமுக, காங்கிரஸ் கூட்டணியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த இடைத் தேர்தலில் விஜய் வசந்த் 5,76,037 வாக்குகளையும், அவரை எதிர்த்து பாஜக சார்பாக போட்டியிட்ட பொன் ராதாகிருஷ்ணன் 4,38,087 வாக்குகளையும் பெற்றனர். இதனால், விஜய் வசந்த் 1,37,950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“