வேளாங்கண்ணிக்கு வாராந்திர ரயில் மற்றும் ஹைதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ்-ஐ கன்னியாகுமரி வரை நீட்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை விஜய் வசந்த் எம்.பி. முன்வைத்தார். கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
Advertisment
அந்த மனு தொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிடம் அவர் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறாமல் இருப்பதை எடுத்துக் கூறி அவற்றுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினேன். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக ரயில்வே அமைச்சகம் மற்றும் ரயில்வே துறையிடம் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
எனினும், யில்வே துறை கன்னியாகுமரி மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணித்து வந்தது. இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் என்னுடைய தலைமையில் நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெற்றது.
தற்போதுவரை, திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக வேளாங்கண்ணிக்கு வாராந்திர ரயில், ஹைதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிப்பது, நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு தினசரி கூடுதல் ரயில், தனி ஒரு மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்துதல், ரயில்வே மேம்பாலங்கள் அமைத்தல், ரயில் பாதை இரட்டிப்பு பணிகளை விரைவு படுத்தல் என பல்வேறு கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் ரயில்வே துறையை நாடியுள்ளேன்” என்றார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“