தமிழகத்தில் இயற்கை வளங்கள் நிறைந்த மாவட்டமாக கன்னியாகுமரி இருக்கிறது. நாட்டின் தென் கோடி எல்லையாக அமைந்துள்ள இந்த மாவட்டம் கேராள மாநிலத்துடன் எல்லையை மட்டுமல்லாது, மலை, இயற்கை வளம் உள்ளிட்டவற்றையும் பகிர்ந்து கொள்கிறது. ஆண்டு முழுதும் பசுமையாகவும், இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகவும் குமரி இருக்கிறது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குமரியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிள்ளியூர் தாலுகாவிற்கு உள்பட்ட 5 கிராமங்களில் 1,144 ஹெக்டேர் பகுதியில் அணுக்கனிமங்களை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த பணியில் மத்திய அரசின் ஐ.ஆர்.இ.எல் நிறுவனம் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அணுக்கனிம சுரங்க திட்டம் அமைப்பது தொடர்பாக வரும் கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி இந்த கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதனிடையே, குமரியில் அணுக்கனிமம் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதற்கு இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அபாயமிக்க இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 'இந்த திட்டத்தால் பாதிப்பு பன்மடங்கு உயரும். கதிரியக்க தன்மை கொண்ட அணுக்கனிமங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டால் அணுக்கதிரியக்க பாதிப்பு ஏற்படும். கடற்கரையிலே நடந்து, அமர்ந்து வேலை பார்க்கும் மீனவர்களுக்கு கதிரியக்க பாதிப்பு அதிகம் நேரிடும்' என்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“