சுதந்திர இந்தியாவில்.1969ஆம் ஆண்டுவரை ரயிலை பார்க்காத ஒரே மாவட்டம் கன்னியாகுமரி. இந்நிலையில், நாகர்கோவில் மக்களவை உறுப்பினராக காமராஜர் இருந்த போதுதான் மத்திய அரசால் குமரி மாவட்ட ரயில்வே திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டது.
இந்தியாவின் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கன்னியாகுமரி கடற்கரை பகுதியை தொட்டு வரவிருக்கும் கன்னியாகுமரி இரயில் நிலையம், இரயில் தடங்கள் பணியை தொடங்கிவைத்தார்.
அப்போது, “நான் என் சிறுவயதில் என் பெற்றோருடன் கன்னியாகுமரி வந்தது. இங்கு பொங்கி வரும் அலைகூட்டத்தின் அழகையும் என் தந்தையின் கையை இறுகப் பற்றிக்கொண்டு மனதில் ஒரு அச்ச நிலையில் துள்ளி வரும் அலைகளில் என் கால் பாதங்களை நனைத்தது எல்லாம் என் நினைவில் இன்றும் பசுமையாக இருக்கிறது.
இப்போது நாம் நிற்கும் பகுதி ஒரு பெரிய மணல் குன்றாக இருந்தது. சிறுவர்கள் தைரியமாக மண்ணால் ஆன மலை குன்றின் உச்சியில் இருந்து உருண்ட வண்ண கடலில் அலை அடிக்கும் பகுதி வரை சென்ற காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக நினைவில் வருகின்றன.
இப்போது என்னால் அந்த அழகிய கன்னியாகுமரியை பார்க்க முடியவில்லை. அனைத்து இடங்களிலும் ஒரு வியாபார தன்மையே காண முடிகிறது. இரயில்வே துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் எனது கோரிக்கை இரயில்வே நிலையத்தை கடற்கரை பகுதியில் அமைக்காது சில கிலோமீட்டரக்கு அப்பால் அமையுங்கள்” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், கன்னியாகுமரியில் இன்றைய ரயில் நிலையம் கடற்கரை பகுதியில் இருந்து மாற்றி கட்டப்பட்டது. கன்னியாகுமரி ரயில் நிலையம் திறப்பு விழா கண்டபோது மத்தியில் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தார்.
அப்போது அன்றைய நாகர்கோவில் மக்களவை உறுப்பினர் குமரி அனந்தன். இந்த நிலையில், மத்திய அரசு கன்னியாகுமரி ரயில் நிலைய கட்டடத்தின் தோற்றத்தை தற்போது அதி நவீன தோற்றத்தில் மாற்றி அமைக்க ரூ.49.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
கன்னியாகுமரி ரயில் நிலையம் நவீன படுத்தப்பட்ட பின் இருக்கும் தோற்றம் மற்றும் நடை மேடைகளுக்கு இடையே பயணிகள் செல்ல தானியங்கி நகரும் படிக்கட்டுகள் வசதி, மேம் பாலங்கள், இரயில் நிலையத்தில் உள்ள தங்கும் விடுதியை நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட மாதிரிகள் வெளியாகியுள்ளன.
கன்னியாகுமரி ரயில் நிலையம் நவீனப்படுத்தும் போதே தமிழகத்தில் உள்ள எழும்பூர், காட்பாடி,மதுரை, ராமேஸ்வரம்,கேரள மாநிலத்தில் எர்ணாகுளம், எர்ணாகுளம் டவுன், கொல்லம் இரயில் நிலையங்களும் நவீனப்படுத்தும் பணிகள் நடக்க உள்ளன.
மேலும், தமிழக,கேரள பகுதிகளில் சிறிய, பெரிய 38 ரயில் நிலையங்களை செப்பனிடும் பணிகளும் ஆய்வில் உள்ளதாக தென்னக இரயில்வே அறிவிப்பில் வெளியிடப்பட்டு உள்ளது.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil