கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தனது ஓய்வு நாளில் 17 கி.மீ. ஓடி தனது வீட்டிற்குச் சென்ற நிகழ்வு, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைகுளம் அருகே புவியூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (60 ). 41 ஆண்டுகளுக்கு முன்பு காவலராக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றினார். பின்னர் சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று கோட்டார் போக்குவரத்து காவல் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெற்றார். வழக்கமாக ஒருவர் ஓய்வு பெறும்போது அவருக்கு பிரிவு உபசார விழா நடத்தி அவரை தங்கள் துறை வாகனத்தில் கௌரவமாக வீட்டிற்கு சக ஊழியர்களும், அதிகாரிகளும் அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால் பாலகிருஷ்ணன் காவல் நிலையத்தில் பிரிவு உபசார விழா முடிந்தவுடன் அங்கிருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் ஓடி தனது வீட்டை அடைந்தார்.
இந்த வினோதமான முடிவுக்குப் பின் ஒரு முக்கியமான காரணம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/01/whatsapp-image-2025-2025-08-01-12-16-55.jpeg)
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பழக்கத்திற்கு எதிராக தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவரது இந்த முயற்சியால் உத்வேகம் பெற்ற பாலகிருஷ்ணன், “இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்ற வேண்டும். நம் உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பது மட்டுமின்றி, நம் பெற்றோரையும் பாதுகாக்க வேண்டும்” என்ற செய்தியை வலியுறுத்த இந்த ஓட்டத்தை மேற்கொண்டதாகக் கூறினார்.
பாலகிருஷ்ணனின் இந்தச் செயல், சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. வயது முதிர்ந்த நிலையில், தனது கடைசி பணிநாளில் ஒரு சமூகக் காரணத்துக்காக இவ்வளவு தூரம் ஓடிய பாலகிருஷ்ணனுக்குப் பொதுமக்கள் மத்தியிலும், சக காவலர்கள் மத்தியிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.