முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தர் பாறை அருகே திருவள்ளூர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்தச் சிலைக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூச வேண்டும். கடலின் உப்பின் தன்மையால் சிலை சேதம் அடையாமல் இருக்க இது பூசப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன பூச்சு பணிக்காக தமிழக அரசு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
முதல் கட்டமாக சிலையை சுற்றி இரும்பு கம்பியால் ஆன சாரம் அமைக்கும் பணி தொடங்கியது. இந்தச் சாரம் அமைக்கும் பணிக்கே இரண்டு மாதங்கள் ஆனது.
-
இனிப்பு வழங்கிய தி.மு.க.வினர்
தொடர்ந்து, ரசாயன பூச்சு பணிகள் தொடங்கின. சிலிக்கான் என்னும் ரசாயன திரவத்தோடு, காகித கூழ் கலவை உருவாக்கி அதனை சில நாள்கள் பெரிய, பெரிய டிரம்மில் ஊறவைத்து அந்தக் காகித கூழ் கலவையை சிலை பகுதியில் முழுமையாக பூசி கிட்டத்தட்ட ஒரு மாத காலம் வரை முழுமையாக உலர வைப்பார்கள்.
இதற்கிடையில் மழை குறுக்கீடு செய்ததால் ரசாயன பூச்சுப் பணிகள் தடைபட்டன. இந்த நிலையில், திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன பூச்சு பணிகள் முடிந்ததும் சிலை பொதுமக்களின் பார்வைக்கு திங்கள்கிழமை (மார்ச் 06) அனுமதிக்கப்பட்டது.
இதையடுத்து அன்றைய தினம் மாலை, அகஸ்தீஸ்வரம் தி மு க., ஒன்றிய செயலாளர் பாபு திருவள்ளுவர் சிலை பாதத்தில் மலர் தூவினார்.
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் நடந்த இந்நிகழ்வில், சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பங்கேற்று மலர் தூவி சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/