மதுரை கப்பலூர் சுங்கச் சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. சுங்கச் சாவடியை சுற்றியுள்ள 7 கி.மீ தூர சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆதார் அட்டை கொண்டு வந்தால் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு பின் அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்தார்.
திருமங்கலம் நகராட்சி எல்லைக்குள் மதுரை- திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் கப்பலூர் சுங்கச்சாவடி செயல்படுகிறது. இந்த சுங்கச்சாவடி விதிமுறைகளை மீறி தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அமைத்துள்ளதாகவும், இந்த சுங்கச்சாவடியை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்கள், வணிகர்கள் பல்வேறு போராட்டங்ளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சட்டசபை தேர்தல் நேரத்தில் தி.மு.க ஆட்சி அமைந்த பின் கப்பலூர் சுங்கச் சாவடி அகற்றப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் தற்போது வரை இந்த சுங்கச்சாவடி அகற்றப்படவில்லை. அதனால், கப்பலூர் சுங்கச்சாவடியில் அடிக்கடி உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது. பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை.
இந்நிலையில், அமைச்சர் மூர்த்தி தலைமையில் வணிகர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் முன்னியிலையில் பேச்சுவாத்தை நடைபெற்றது. இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, 2020-ம் ஆண்டில் செய்யப்பட்டது போலவே உள்ளூர் மக்கள் சுங்கக் கட்டணம் இல்லாமல் கப்பலூர் சுங்கச்சாவடியில் செல்ல வேண்டும் எனவும் அந்த சுங்கச்சாவடியை சட்டத்திற்கு உட்பட்டு 60.கி.மீக்கு அப்பால் அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இதனடிப்படையில் இன்று மதுரை கப்பலூர் சுங்கச் சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. . 2020-ம் ஆண்டைப் போலவே உள்ளூர் மக்கள் சுங்கக் கட்டணம் இல்லாமல் கப்பலூர் சுங்கச்சாவடியில் செல்லலாம் உள்ளூர் மக்களுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையூறு செய்யக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“