சட்டப்பேரவையிக் கேள்வி நேரத்தில், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற மத்திய அரசை வலியுறுத்தப்படுமா என அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசியவர், நகராட்சியில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் அமைந்திருக்கும் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று கோரினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, விதிகளை மீறி இயங்கும் சுங்கச்சாவடிகளை அகற்ற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார். மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு 2, 3 கடிதங்கள் அனுப்பி உள்ளதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய எ.வ.வேலு, கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றாவிட்டாலும் குறைந்தபட்சம் உள்ளூர்காரர்களுக்கு பாஸ் வழங்குமாறு கேட்டுள்ளதாகவும் கூறினார். மீண்டும் அந்த கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்றும், அதற்கான முயற்சி தொடர்ந்து நடைபெறும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார்.