திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற பயணிகள் ரயில் திருவெறும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்தபோது எஞ்சினில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதனால் பதறிப்போன பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர்.
திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு தினமும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து காலை 8.25 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.05 மணிக்கு காரைக்கால் சென்றடையும். மறுமார்க்கமாக மதியம் 2.55 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்பட்டு மாலை 6:45 மணிக்கு திருச்சி ஜங்ஷன் வந்தடையும்.
அதுபோல் இன்று காலை திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு காலை 8.25 மணிக்கு முன்பக்கம் இஞ்சினோடு பின்பக்கம் இன்ஜினையும் சேர்த்து மொத்தம் எட்டு பெட்டிகளுடன் பயணிகள் டெமு ரயில் புறப்பட்டு சென்றது. திருவெறும்பூர் ரயில் நிலையத்துக்கு ரயில் வந்தபோது, அதன் பின்பக்கம் பொருத்தப்பட்டிருந்த ரயில் இன்ஜினின் காட் பெட்டியில் திடீரென அதிக அளவில் புகை வந்தது.
இதனை அடுத்து திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டதுடன், உடனடியாக பயணிகளை வெளியேறும்படி ரயில்வே ஊழியர்கள் அறிவுறுத்தினர்.
பின்னர், திருச்சியில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் காரைக்கால் செல்லக்கூடிய பயணிகளை ரயில்வே ஊழியர்கள் ஏற்றி அனுப்பினர்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக ரயில்வே அதிகாரிகள், திருவெறும்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் ரயில் இன்ஜினில் ஏற்பட்ட தீயை உடனடியாக அணைத்தனர்.
பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து ரயில்வே தொழில்நுட்ப வல்லுனர்கள் ரயில் இன்ஜினில் தீ விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“