சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியுடன் அரியக்குடி, இலுப்பக்குடி, சங்கராபுரம், கோவிலூர், மானகிரி ஊராட்சிகள் மற்றும் கோட்டையூர், கண்டனூர் பேரூராட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊராட்சிகளின் தலைவர் பதவி காலம் கடந்த 5 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இலுப்பக்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மூலம் 100 நாள் வேலை ஒரு வாரம் பணி செய்வதற்காக அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பணிக்கு சென்ற நூற்றுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலுப்பக்குடி ஊராட்சி காரைக்குடி மாநகராட்சி உடன் இணைந்துள்ளதால் 100 நாள் வேலை நிறுத்தப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் காரைக்குடி - இலுப்பக்குடி -மாத்தூர் செல்லும் சாலையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காரைக்குடி வட்டாட்சியர் ராஜா பேச்சுவார்த்தை நடத்தி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை 500 க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு காவல் துறையிரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் தான் எங்கள் வாழ்வாதாரம் உள்ளது. கிராமப்புறத்தில் ஏழ்மையில் வாழ்ந்து வரும் எங்களுக்கு 100 நாள் வேலை திட்டம் பெரும் உதவிகரமாக இருந்தது. தற்போது மாநகராட்சியுடன் இணைந்து விட்டதாக கூறி 100 நாள் வேலை இல்லை என்று கூறுவது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினர்.