கராத்தே தியாகராஜன் நீக்கத்திற்கு கோபண்ணா காரணமா? மூண்டது புதிய மோதல்

karate thiagarajan Meets P Chidambaram: இன்று காலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை சந்தித்து பேசினார் கராத்தே தியாகராஜன்.

karate thiagarajan Suspended, கராத்தே தியாகராஜன், காங்கிரஸ், karate thiagarajan Meets P Chidambaram
karate thiagarajan Suspended, கராத்தே தியாகராஜன், காங்கிரஸ், karate thiagarajan Meets P Chidambaram

Karate thiagarajan vs Gopanna: காங்கிரஸில் கராத்தே தியாகராஜன் நீக்கப்பட்டது தொடர்பாக அவருக்கும், கோபண்ணாவுக்கும் இடையே மோதல் மூண்டது. ப.சிதம்பரத்தை சந்தித்த பிறகு காரசாரமாக பேட்டி அளித்தார் கராத்தே தியாகராஜன்.

கராத்தே தியாகராஜன், தென் சென்னை காங்கிரஸ் தலைவராக இருந்தார். திமுக.வின் கே.என்.நேரு பேச்சுக்கு பதில் தெரிவிக்கும் விதமாக, ‘நாங்கள் யாரையும் காங்கிரஸுக்கு பல்லக்கு தூக்கச் சொல்லவில்லை’ என்றார். இதையடுத்து காங்கிரஸில் இருந்து இரு தினங்களுக்கு முன்பு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

எனினும் கராத்தே தியாகராஜன் மீதான நடவடிக்கைக்கு என்ன காரணம்? என்பதை காங்கிரஸ் மேலிடம் அதிகாரபூர்வமாக கூறவில்லை. ‘திருநாவுக்கரசர் சொந்த செல்வாக்கில் வென்றதாக சொல்வதாக’ கராத்தே தியாகராஜன் பேசியதாக ஒரு சர்ச்சை எழுந்தது. அதற்கு பதிலளித்த திருநாவுக்கரசர், ‘நான் அப்படி எங்கும் பேசவில்லை. இது கண்டனத்துக்குரியது’ என்றார். திருநாவுக்கரசர் புகாரின் அடிப்படையில் கராத்தே தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வந்தன.

இதற்கிடையே இன்று காலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை சந்தித்து பேசினார் கராத்தே தியாகராஜன். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா டெல்லியில் முகாமிட்டு தன்னை நீக்க சதி செய்ததாக’ புகார் கூறினார்.

மேலும் கராத்தே தியாகராஜன் கூறுகையில், ‘கோபண்ணா காங்கிரஸ் அறக்கட்டளை சொத்துக்களை அபகரித்திருப்பதாக’ குற்றம் சாட்டினார். ‘நான் ராஜீவ் காந்தியின் ரத்தத்தை பார்த்தவன், கடைசி வரை காங்கிரஸ் காரனாகவே இருப்பேன். ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்’ என்றார் கராத்தே தியாகராஜன்.

இதற்கிடையே கராத்தே தியாகராஜனால் குற்றம் சாட்டப்பட்ட கோபண்ணா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘காங்கிரஸில் கராத்தே தியாகராஜனுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை. எனவே அதிமுக – பாஜக தூண்டுதலின் பேரில் காங். – திமுக கூட்டணியை முறிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார்.

கராத்தே தியாகராஜன் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு திமுகவின் அழுத்தம் காரணமல்ல. காங்கிரஸ் சொத்துக்களை கொள்ளை அடித்ததாக என்மீது கராத்தே தியாகராஜன் கூறும் குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்றது. என் தந்தை என்னிடம் வழங்கிய விவசாய நிலத்தை தவிர, என்னிடம் எந்த சொத்துக்களும் இல்லை. காமராஜர் அறக்கட்டளை கடைகளை வாடகைக்கு நான் பயன்படுத்துகிறேன்’ என்றார் கோபண்ணா.

காங்கிரஸில் மூண்டிருக்கும் இந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Karate thiagarajan congress suspended gopanna

Next Story
தினமும் மின்சார ரயிலில் வேலைக்கு சென்று வருபவர்களுக்கு ஒரு நற்செய்தி..இனி 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் பிளாட்பாரத்தில் நிற்கும்.indian railways ticket booking
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com