‘கரிசல் குயில்’ எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவு ; அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் இரங்கல்!

வட்டார இலக்கியத்தின் ‘முன்னத்தி ஏர்’, தலைச்சிறந்த கதைச்சொல்லி, தமிழ் எழுத்துலகத்தின் பீஷ்மர் என்றெல்லாம் எழுத்துலக ஜாம்பவான்களாலும், வாசகர்களாலும் போற்றப்பட்டவர் எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.

Tamil Writer Ki.Rajanarayanan Death News Tamil : தமிழின் மிக மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான கி.ராஜநாராயணன் வயது மூப்பின் காரணமாக புதுச்சேரியில் உள்ள அவரத் இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 99. புதுச்சேரியில் லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை கருவடிக்குப்பம் இடுகாட்டில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

வட்டார இலக்கியத்தின் ‘முன்னத்தி ஏர்’, தலைச்சிறந்த கதைச்சொல்லி, தமிழ் எழுத்துலகத்தின் பீஷ்மர் என்றெல்லாம் எழுத்துலக ஜாம்பவான்களாலும், வாசகர்களாலும் போற்றப்பட்டவர் எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.உடல்நலக் குறைவால் கடந்த சில தினங்களாக வீட்டில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று இரவு வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் எனும் கிராமத்தில் 1923-ம் ஆண்டு செம்டம்பர் 16-ம் தேதி பிறந்தார் கி.ராஜநாராயணன். அவரது இயற்பெயர் ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர் என்பதாகும். 7-ம் வகுப்பு வரை மட்டுமே தனது பள்ளிக் கல்வியை பயின்ற கி.ராஜநாராயணன், 1958-ம் ஆண்டு ‘மாயமான்’ எனும் சிறுகதையை சரஸ்வதி இதழில் எழுதியன் மூலம் தமிழ் எழுத்துலகில் அறிமுகமானார். அதன் பிறகு, குறுநாவல், நாவல், கிராமியக் கதைகள், கடிதம் என தமிழ் இலக்கியத்தின் அனைத்து தடங்களிலும் தடம் பதித்தார். 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராக கி.ரா. பணியாற்றினார்.

செவ்விலக்கியக் கூறுகள், வட்டார வாய்மொழி மரபு என தனக்கென தனி எழுத்து நடையை கி.ரா.உருவாக்கிக் கொண்டார். கரிசல் வட்டார அகராதி என கரிசல் நில மக்கள் பேசும் மொழிக்கான தனி அகராதி ஒன்றையும் கி.ரா. உருவாக்கினார். இதற்காக வட்டார மொழிக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி என்ற பெருமையையும் கி.ரா. பெற்றார் கி.ரா.பக்கங்கள், கிராமியக் கதைகள், கொத்தைபருத்தி, புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைகள், கோபல்ல கிராமம், ‘புதுமைப் பித்தன்’, ‘மாமலை ஜீவா’, ‘கண்ணீர்’, ‘கரிசல் கதைகள்’ ஆகியவை அவரது தமிழ் இலக்கியப் படைப்புகளில் முக்கியமானதாகும் மேலும், 6 கட்டுரைத் தொகுதிகள், 3 நாவல்கள், 2 குறுநாவல்களையும் அவர் எழுதியுள்ளார். கோபல்லபுரத்து மக்கள் நாவலுக்காக 1991-ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருதினையும் கி.ரா. பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் அண்டரண்டப்பட்சி எனும் பெண்கள் குறித்த புத்தகத்தை தன் கைப்பட எழுதினார். கைப்பிரதியாகவே வாசகர்கள் படிக்க வேண்டும் என்ற எண்ணித்தில் கி.ரா.எழுதிய காரணத்தால் அச்சில் பதிக்கப்ப்டவில்லை. எழுதாமல் விட்ட கதைகளையும், சாவஞ்செத்த சாதிகள் என்ற கதையினையும் ஒரு தொகுப்பாக்கி மிச்ச கதைகள் எனும் புத்தகத்தையும் கி.ரா. எழுதியுள்ளார். அவரது அனைத்து படைப்புகளின் உரிமையையும் தனது இரண்டு மகன்கள் மற்றும் அவரது வாசகரான புதுவை இளவேனில் என்பவருக்கு எழுதி கொடுத்துள்ளார். இந்த மூவரிடமும் தனது படைப்புகளின் மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதியில், கரிசல் அறக்கட்டளை என துவங்கி எழுத்தாளர்களுக்கும், சிறு பத்திரிகைகளுக்கும் தனது பெயரில் பணம் மற்றும் விருதினை வழங்க வேண்டும் எனவும் கி.ரா.தெரிவித்துள்ளார்.

கி.ரா.வின் மறைவை அடுத்து, புதுவை முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என பல அரசியல் தலைவர்களும், எழுத்தாளர்களும் வாசகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘கரிசல் குயில்’ கி.ரா அவர்களின் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள் என தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அரசு சார்பில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Karisal land writer kira ki rajanarayanan death news leaders writers condolences

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com