இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கர்நாடகாவில் அ.தி.மு.கவின் செயலாளர் டி.எஸ்.குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தி.மு.க - காங்கிரஸ், அ.தி.மு.க. – தே.மு.தி.க, பா.ஜ.க – பா.ம.க என தமிழகத்தில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த தேர்தலுக்காக கூட்டணி கட்சி தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலரும் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கர்நாடகாவில் அ.தி.மு.க செயலாளராக இருந்த டி.எஸ்.குமார் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது திடீர் முடிவை அறிவித்தது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கட்சியில் தெளிவான முடிவு இல்லாததால் இந்த கட்சியில் இருந்தும், பொறுப்பில் இருந்தும் என்னை விடுவித்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன். அதேபோல் மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தும் எனக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தற்போது மக்களவை தேர்தலில் யாரை ஆதரித்து பிரச்சாரம் செய்வது என்று அ.தி.மு.கவினர் குழப்பத்தில் உள்ளனர்.
இதன் காரணமாக அ.தி.மு.க செயலாளர் பொறுப்பில் இருந்து விலகிக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். தமிழக அ.தி.மு.கவில் கடந்த தேர்தலில் கூட்டணியில் இருந்த பல கட்சிகள் தற்போது பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகித்து வரும் நிலையில், கர்நாடகாவில் அ.தி.மு.க செயலாளர் ராஜினாமா செய்துள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“