க.சண்முகவடிவேல்
Farmer-protest | chennai: சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகில், கர்நாடகாவின் பந்த் போராட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர்.பாண்டியன், பொதுச் செயலாளர் வி கே வி துரைசாமி ஆகியோர் தேசியக் கொடி ஏந்தி இன்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த காவல்துறை ஆய்வாளர் சண்முகசுந்தரம் அமைதி வழியில் தேசியக் கொடி ஏந்தி போராட்டம் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் தள்ளுமுள்ளு செய்தனர். மேலும், அவர்களை தரையில் போட்டு இழுத்து கால்களில் ரத்தக்காயம் ஏற்பட்டது. பி. ஆர் பாண்டியன் தற்போது காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படாமல் திருவல்லிக்கேணி வி.என் வெங்கட்ரங்கம் தெரு சமூகநல கூடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பி.ஆர் பாண்டியன் தெரிவித்ததாவது:-
காவிரி டெல்டாவில் 5 லட்சம் ஏக்கர் குருவைப் பயிர் சாகுபடி செய்யப்பட்டு 3.50 லட்சம் ஏக்கரில் கருக தொடங்கிவிட்டது. கலைஞர் பிறந்த திருக்குவளை விவசாயி ராஜ்குமார் நாயுடு கருகியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து விளைநிலத்தில் மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார். சுமார் 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி தொடங்க முடியவில்லை.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் 15 தினங்களுக்கு தண்ணீர் விடுவிக்க உத்திரவிட்டது. கர்நாடகாவில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்கமாட்டோம் என்று கூறி நாளை 26 ஆம் தேதி முழுஅடைப்பு பந்த் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்து உள்ளனர். இப்போராட்டத்திற்கு கர்நாடக முதலமைச்சர் சிந்தராமையா போக்குவரத்தை நிறுத்தி வைத்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 2015 ஆம் ஆண்டில் சித்தராமையா முதலமைச்சராக இருந்தபோது காவிரி போராட்டத்தில் முழு அடைப்பு என்கிற பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாடு வாகனம் தீயிட்டு எரிக்கப்பட்டது. தமிழர்களுடைய வணிக நிறுவனங்கள் அடித்து நொறுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், நாளை பந்த் போராட்டத்திற்கு சித்ராமய்யா ஆதரவு தெரிவிப்பதால் பெரும் கலவரம் வெடிக்கும். தமிழர்களுக்கு மிகப்பெரிய பேரிழப்பு ஏற்படும். கடந்த இரண்டு தினங்களாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் பசவரா பொம்மை தலைமையில் சாலை மறியல் போராட்டம் என்கிற பெயரில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பந்த் போராட்டம் நடத்துவதை மத்திய அரசு பிரதமர் தலையிட்டு தடை விதிக்க வேண்டும். இதனை தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகில் தேசியக்கொடியை பிடித்து அமைதி ஏற்படுத்த வேண்டும் என பொதுச் செயலாளர் வி.கே துரைச்சாமியோடு தர்ணாவில் ஈடுபட்டேன்.
இந்நிலையில் திடீரென்று வந்த காவல்துறை ஆய்வாளர் சண்முசுந்தரம் முதலமைச்சர் இவ்வழியாக வரப்போகிறார். இங்கே அமர்ந்து நீங்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என தள்ளுமுள்ளு செய்து, தரையில் போட்டு இழுத்து காவல் வாகனத்தில் ஏற்றி, சமூகநல கூட்டத்தில் தரையில் தற்போது அமர வைக்கப்பட்டுள்ளேன்.
கர்நாடகா நடவடிக்கையை கண்டித்து அமைதி வழியில் தனது கருத்தை எடுத்துரைப்பதற்காக வந்த என்னை அவமானப்படுத்தி இருப்பதை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். குடிப்பதற்கு தண்ணீர் கொடுக்கப்பட்டது காலில் ஏற்பட்ட சிராய்ப்பு காயத்திற்கு மருத்துவம் செய்வதற்காக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். நான் ஏற்கவில்லை. உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
கர்நாடகாவில் நாளை நடைபெறும் முழு அடைப்பு பந்த் போராட்டம் தமிழர்களின் சொத்துக்கும் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து ஏற்படும் என்பதால் உடனடியாக பிரதமர் தடை விதிக்க முன்வர வேண்டும். அதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.
என் போராட்டத்தால் தமிழக விவசாயிகள் மீது முதலமைச்சருடைய தூண்டுதலில் காவல்துறை அத்துமீறி செயல்படுகின்றனர். இதுவரையிலும் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக எத்தனையோ போராட்டங்கள் நடத்தி இருக்கிறோம். அம்மையார் ஜெயலலிதா முன்னாள் முதலமைச்சர்கள் ஓ.பி.எஸ், எடப்பாடி ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்ட போராட்டங்கள் தான் காவிரியை உரிமையை மீட்டுக் கொடுத்தது.
போராட்டங்களுக்கு அன்றைய முதலமைச்சர்கள் எங்களோடு துணை நின்றார்கள். ஆனால் இன்றைக்கு அந்த உரிமையை அபகரிப்பதற்கான வகையில் நடைபெறுகிற போராட்டத்தை தடுத்து நிறுத்த போராடியதால் காவல்துறை மிருகங்களை நடத்துவது போல் நடத்தி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“