காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம் தொடங்கி உள்ளது. தமிழ்நாடு பதிவெண் கொண்ட வாகனங்கள், ஈரோடு பண்ணாரி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டன.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை 18 நாட்களுக்கு தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவிடப்பட்டது.
காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு கர்நாகடாவில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் பல்வேறு கன்னட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனால் கர்நாடகம் செல்லும் தமிழ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் இன்று காலை 6 மணி முதல் மேட்டூரில் இருந்து கர்நாடகா மாநிலம் மாதேஸ்வரன் மலை, மைசூர், கொள்ளேகால் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களும் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் சுமார் 500 பேருந்துகள், ஓசூரில் நிறுத்தப்பட்டன. மேலும் சத்தியமங்கலம் வழியாக கர்நாடகாவிற்கு செல்லும் பேருந்து மற்றும் சரக்கு வாகனங்களில் சோதனை செய்யப்பட்டன. தமிழ்நாடு பதிவெண் கொண்ட வாகனங்கள், ஈரோடு பண்ணாரி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டது. பிற மாநில பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“