Edappadi K Palaniswami | Karnataka State கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 2024-25ஆம் ஆண்டுக்கான 15வது பட்ஜெட்டை கர்நாடக சட்டப்பேரவையில், முதல்வர் சித்தராமையா நேற்று வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய சித்தராமையா, மத்திய அரசின் அனுமதியை பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும் எனவும், அணைகட்டும் பணிகளை மேற்கொள்ள பிரத்யோக தனித் திட்டப் பிரிவும், இரண்டு துணைப் பிரிவுகளும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. நிலத்தை கண்டறிய கணக்கெடுப்பு மற்றும் மரங்களை எண்ணும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இந்நிலையில், இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசுக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் "உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி செயல்படும் கர்நாடகா அரசின் செயல்பாடுகளை தி.மு.க அரசு வேடிக்கை பார்க்கிறதா? மேகதாதுவில் அணை கட்டினால் 20 மாவட்ட மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் டெல்டா மாவட்ட விளைநிலங்கள் நீரின்றி பாலைவனமாகும். கர்நாடகத்தை ஆண்ட காங்கிரஸ் அரசும், பா.ஜ.க அரசும் தமிழ்நாட்டுக்கு துரோகங்கள் செய்தது. மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும்." எனறு அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“