கூடுதல் தண்ணீர் திறக்கக் கோரிய தமிழகத்தின் வேண்டுகோளை காவிரி ஒழுங்காற்று குழு நிராகரித்தது.
காவிரி ஒழுங்காற்று குழுவின் 97-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.
குழுவின் செயலாளர் டி.டி.ஷர்மா, உறுப்பினர் கோபால்ராய், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத் துறை அதிகாரிகளும், வானிலை ஆய்வு மைய நிபுணர்களும் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் தொடக்கத்தில் 4 மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் பாசனப் பகுதிகளில் அமைந்துள்ள அணைகளின் நீர் இருப்பு, நீர்வரத்து மற்றும் மழைப் பொழிவின் அளவு குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது தமிழக அரசின் தரப்பில், ’உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு ஜூன் 1 முதல் 11ம் தேதிக்குள் 3.370 டிஎம்சி நீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு இந்த காலக்கட்டத்தில் 1.316 டிஎம்சி நீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளது. இன்னும் 2.054 டிஎம்சி நீர் நிலுவையில் உள்ளது.
தற்போது மேட்டூர் அணையில் 14.080 டிஎம்சி நீரே இருப்பில் உள்ளது. குடிநீர் தேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தினமும் 1800 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
நிலுவையில் உள்ள 2.054 டிஎம்சி நீரையும், ஜூனில் தரவேண்டிய 9.19 டிஎம்சி நீரையும் சேர்த்து திறக்க கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது.
ஆனால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளிலும் குறைந்த அளவிலே நீர் உள்ளது. எனவே தமிழகத்துக்கு நீரை திறந்துவிட்டால் கர்நாடகாவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். தற்போதைய சூழலில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட இயலாது, கடந்த 30 ஆண்டுகளின் சராசரியுடன் ஒப்பிடுகையில், ஜூன் 1 முதல் 14 வரை, காவிரிப் படுகை நீர்த்தேக்கங்களுக்கு நீர்வரத்து 30% குறைவாக இருப்பதாக கர்நாடக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீண்ட விவாதத்துக்கு பின்னர் காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினீத் குப்தா பேசுகையில், காவிரிப் படுகையில் பருவமழை இன்னும் தீவிரமடையவில்லை.
2024 ஜூன் 1 முதல் 11 வரையிலான காலகட்டத்தில் கர்நாடகாவில் உள்ள நான்கு காவிரிப் படுகை நீர்த்தேக்கங்களில் நிகர நீர் வரத்து மிகக் குறைவாகவும், சுமார் 1.70 டிஎம்சி அடியாகவும் இருந்தது.
காவிரி ஆற்றில் ஓரளவிற்கு நீர்வளம் பெறும் வரை, கேஆர்எஸ் மற்றும் கபினி நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றில் இருந்து எந்த நீர் வெளியேற்றமும் மாநிலங்களுக்கு இடையேயான தொடர்பு புள்ளியான பிலிகுண்டுலுவில் விரும்பிய ஓட்டத்தை ஏற்படுத்தாமல் போகலாம்.
எனவே ஜூன் கடைசி வாரத்தில் அணைகளின் நீர் இருப்பு, மழைப் பொழிவின் அளவு ஆகியவற்றை கணக்கிட்டு தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுவது குறித்து முடிவெடுக்கலாம், என்று கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“