கர்நாடகா மாநிலத்தில் அண்ணாமலை பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனக் கூறி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.
224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 13 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. தற்போது வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்து, இறுதியாக சட்டசபை தேர்தல் களத்தில் 2,613 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை அனைத்து கட்சிகளும் தீவிரப்படுத்தி உள்ளன.
இதையும் படியுங்கள்: ஆடியோவில் பாதி அமைச்சர் பி.டி.ஆர் பேசியது அல்ல: மா.சு விளக்கம்
இந்தநிலையில், கர்நாடக தேர்தலில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் அளித்துள்ள புகார் மனுவில், 2011 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலை, நட்சத்திர பேச்சாளராக கர்நாடக மாநிலம் முழுவதும் பயணம் செய்து வருகிறார். அவரது பேட்ச்-ஐ சேர்ந்தவர்களும் அவருக்கு கீழ் பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகளும் தற்போது தேர்தல் தொடர்பான பணிகளில் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றனர். அண்ணாமலை கர்நாடக மாநில பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளராகவும் இருப்பதால், தேர்தல் பணியில் உள்ள காவல்துறையினர் அவருக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்பு உள்ளது.
முன்னாள் காவல்துறை அதிகாரி என்ற வகையில் தேர்தல் இயந்திரத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. அவரது வாகனத்தை போலீசார் சோதனையிடுவதில்லை, எனவே அவர் பணத்தையும் ஆட்களையும் கடத்த வாய்ப்பு உள்ளது. அதனால் நியாயமான நேர்மையான தேர்தலை நடத்தும் வகையில் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் முடியும் வரை அவரை கர்நாடகாவினுள் நுழைய அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அந்த புகார் மனுவில் காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil