காவிரி டெல்டாவில் தூர் வாரும் பணிகளை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் துவங்கிட வேண்டும். உயர் அதிகாரிகள் கொண்ட கண்காணிப்பு குழுவை உடன் அனுப்பி வைக்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் நூறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
குமரி முதல் சென்னை வரையிலும் நடைபெற உள்ள போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
சென்னை எழும்பூரில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் நான் (பி ஆர்.பாண்டியன்) பங்கேற்க இருக்கிறேன்.
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு மறைமுக சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது. பெங்களூர் நகரத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக உண்மைக்கு புறம்பாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. இதனை காரணம் காட்டி மேகதாது அணை கட்டுவதற்கு அனுதாபம் தேட முயற்சிக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் இதனை முறியடித்து தடுத்து நிறுத்த விழித்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து மௌனம் காப்பது ஏற்கத்தக்கது அல்ல.
நெய்வேலி நிலக்கரி சுரங்க தலைவர் அணுமின் நிலையம் குறித்து வெளியிட்ட கருத்தை திரும்ப பெற வேண்டும்.
காவிரி டெல்டாவில் மார்ச் மாதமே தூர்வாரும் பணி தொடங்கி இருப்பதை வரவேற்கிறோம். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக அனைத்து பணிகளையும் துவங்குவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை கண்காணிக்க மாநில உயர் அதிகாரிகள் கொண்ட கண்காணிப்பு குழுக்களை ஏற்படுத்தி உடனடியாக காவிரி டெல்டாவிற்க்கு அனுப்பி வைத்து தூர்வாரும் பணிகளை விரைவு படுத்த வேண்டும்.
இல்லையேல் தேர்தல் தேதி அறிவிப்பு வரை காலம் கடத்தி விட்டு தண்ணீர் திறப்புக்கு முன்னதாக அவசர கோலத்தில் பணி செய்வதாக கூறி ஊழல் முறைகேடுகள் செய்வதற்கு வழி வகுத்து விடும் என்றார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“