Advertisment

1970-ல் மேயர் பதவிக்கு உதவினோம்; பா.ஜ.க-வுடன் முதலில் கூட்டணி வைத்தது தி.மு.க: வானதி சீனிவாசன் அறிக்கை

பாஜக தோல்வியை தழுவியதால் பலர் கூறும் கருத்துக்களுக்கு பதில் கூறும் விதமாக வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vanathi srinivasan

வானதி சீனிவாசன்

கர்நாடகாவில் நடத்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றதை அடுத்து அரசியல் கட்சிகளில் இருந்து பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இதை தொடர்ந்து, பாஜக தோல்வியை தழுவியதால் பலர் கூறும் கருத்துக்களுக்கு பதில் கூறும் விதமாக வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, "கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வென்றுள்ளது. 66 தொகுதிகளில் வென்று பலமிக்க எதிர்க்கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. 1951-ல் 'பாரதிய ஜனசங்கம்' தொடங்கப்பட்ட காலத்திலிருந்து பாஜக சந்தித்த தோல்விகளை, நெருக்கடிகளை யாரும் சந்தித்திருக்க மாட்டார்கள். காங்கிரஸ் மற்றும் குடும்பத்தின் பிடியில் உள்ள மாநில கட்சிகளின் அதிகார பலம், ஆள் பலம், பணபலத்தை தாண்டி, மத அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகளால் பல்லாயிரம் உயிர்களை பலிகொடுத்து, நெருப்பாற்றில் நீந்திதான் தனிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து இருமுறை நாட்டை வழிநடத்திற்கு வந்திருக்கிறோம்.

ஆனால், ஜனநாயகத்திற்கு எதிராக, சமத்துவத்திற்கு எதிராக, சமூக நீதிக்கு எதிராக, கட்சித் தலைமையையும், ஆட்சித் தலைமையையும் ஒரே குடும்பத்திலிருந்து பிறப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் காங்கிரஸும், திமுக போன்ற மாநில கட்சிகளும் கர்நாடகத்தில் பாஜகவுக்கு கிடைத்த தோல்வியை கொண்டாடி வருகின்றன. நாட்டை உயிரென போற்றும் தேசியவாதிகள் தோற்றால், பிரிவினை சித்தாந்தம் கொண்டவர்கள் மகிழ்ச்சி அடைவது இயல்புதான். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், 'பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்கு கர்நாடக மக்கள் தகுந்த பாடம் புகட்டிவிட்டார்கள். திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலும் அகற்றப்பட்டு விட்டது. 2024 பொதுத்தேர்தலில் வெல்ல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

மத்தியில் கடந்த 9 ஆண்டுகளாக தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி நடக்கிறது. பாஜகவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை அவரது மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன். இந்திரா காந்திக்கு தனிப்பெரும்பான்மை இருந்தபோது இன்றைய முதல்வர் ஸ்டாலின் சிறையில் இருந்தார். ராஜீவ் காந்தி தனி பலத்துடன் ஐந்தாண்டுகள் ஆண்டபோது எதிர்க்கட்சிகள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தன. இந்திரா, ராஜீவ் காலத்து 'முரசொலி' இதழ்களை மட்டும் மீண்டும் படித்து பார்த்தால், பாஜக பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறது என்று ஸ்டாலின் ஒருபோதும் சொல்ல மாட்டார்.

திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலும் நீக்கப்பட்டு விட்டது என்ற ஸ்டாலின் புளகாங்கிதம் அடைந்திருக்கிறார். அவருக்கு வரலாற்றின் சில பக்கங்களை நினைவூட்ட விரும்புகிறேன். 1925-ல் மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் தொடங்கப்பட்ட ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.), அடுத்த 10 ஆண்டுகளிலேயே கர்நாடகம், கேரளத்தில் வலுவாக காலூன்றியது. வடக்கு ஆர்.எஸ்.எஸ்.ஸை ஏற்கும் முன்பே பெங்களூரு மாநகரமும், கடலோர கர்நாடகமும் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு பெரும் ஆதரவளித்தன.

1948-ல் மகாத்மா காந்தி படுகொலையில் ஆர்.எஸ்.எஸ். மீது வீண்பழி சுமத்தி தடை செய்யப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் அன்றைய தலைவர் மாதவ சதாசிவ கோல்வால்கர் கைது செய்யப்பட்டார். இதனால் ஆர்.எஸ்.எஸ்ஸின் அன்றாட செயல் வடிவமான ஷாகா உள்ளிட்ட அனைத்து பணிகளும் முற்றாக நின்றன. கிட்டத்தட்ட ஆர்.எஸ்.எஸ். முழுமையாக அழிந்தன என்ற எதிரிகள் மன நிம்மதி அடைந்தனர். ஆனால், கோல்வால்கரின் சாதுர்யத்தால் நீதிமன்றங்களில் உண்மையை நிலைநாட்டியதும், ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை அன்றைய காங்கிரஸ் அரசு நீக்கியது.

தடை நீக்கப்பட்டாலும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் இணைந்து செயல்பட பலரும் முன்வரவில்லை. ஆர்.எஸ்.எஸ். என்றாலே ஒருவித அச்சம் ஏற்பட்டது. அந்த காலகட்டத்தில் வட மாநிலங்களில் கூட ஆர்.எஸ்.எஸ்.ஸால் நிகழ்ச்சிகள், கூட்டங்களை நடத்த முடியவில்லை. ஆனால், பெங்களூரு மாநகரிலும், மங்களூரு, உடுப்பி போன்ற கர்நாடகத்தின் கடற்கரை பகுதிகளிலும் ஆர்.எஸ்.எஸ். நடத்திய கூட்டங்கள், சீருடை அணிவகுப்பில் பல்லாயிரம் பேர் திரண்டனர். கர்நாடகம் தந்த இந்த நம்பிக்கை, உற்சாகத்தில்தான் நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். மறு உருவாக்கம் செய்து கொண்டது.

ராமஜென்ம பூமி இயக்கம் மூலம் நாடெங்கும் இந்து எழுச்சிக்கு வித்திட்ட, 'விஸ்வ இந்து பரிஷத்' துவங்கப்பட்டதும் கர்நாடகத்தின் உடுப்பியில்தான். உடுப்பியில் நடந்த துறவியர்கள் மாநாட்டில்தான், இந்து மதத்தில் தீண்டாமை இல்லை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை, இந்து மதத்தின் அனைத்து சம்பிரதாயங்களைச் சேர்ந்த துறவிகளும் இணைந்து நிறைவேற்றினர். அதற்கு செயல் வடிவம் கொடுக்கவே 'விஸ்வ இந்து பரிஷத்' அமைப்பு தொடங்கப்பட்டது. இப்படி திராவிட நிலப்பரப்பில் இருந்து தான் ஆர்.எஸ்.எஸ். எழுந்தது. அதிலிருந்துதான் பாஜகவும் எழுந்தது. கர்நாடகத்தின் தனிப்பெரும் தலைவரான எடியூரப்பாவும் ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்து உருவானவர்தான்.

ஆர்.எஸ்.எஸ், பாஜகவை நாடு முழுவதும் கொண்டுச் செல்ல பெரும் பங்காற்றிய பல தலைவர்கள் கர்நாடகத்தில் இருந்து உருவானவர்கள்தான். இன்றும்கூட ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஷாகாக்கள் அதிகம் நடப்பது திராவிட நிலப்பரப்பான கர்நாடகம், கேரளத்தில்தான். இதனை கூட்டணி தலைவர்களான கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகத்தின் சித்தராமையாவிடம் கேட்டாலே சொல்லி விடுவார்கள்.

கர்நாடகத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும் 1950-ம் ஆண்டுகளில் இருந்த ஆர்.எஸ்.எஸ்.ஸும், பாஜகவும் செயல்பட்டு வருகின்றன. பலரும் 1998-ல் பாஜகவும் முதல் முதலில் கூட்டணி வைத்தவர் ஜெயலலிதா தான் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். 1970-ம் ஆண்டுகளில் ஜனசங்கத்தின் ஆதரவுடன்தான் மதுரை மாநகராட்சி மேயர் பதவியில் திமுக அமர்ந்தது. நீதிக்கட்சியின் தலைவர், சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த பி.டி.ராஜனின் மகனும், திமுகவின் முக்கியத் தலைவராக இருந்த பழனிவேல்ராஜன், ஜனசங்கத்தின் ஆதரவுடன்தான், மதுரை பட்டதாரி தொகுதியில் வென்று தமிழ்நாடு சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்காக சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து, அன்றைய ஆர்.எஸ்.எஸ். மாநில அமைப்பாளர் சூரிய நாராயண ராவிற்கு பொன்னாடை அணிவித்து, பழனிவேல்ராஜன் நன்றி தெரிவித்தார். அந்த வகையில் பாஜகவுடன் முதலில் கூட்டணி அமைத்தது திமுகதான். முதல்வர் ஸ்டாலினின் தந்தை கருணாநிதிதான்.

இப்போதும் புதுச்சேரி யூனியன்பிரதேசத்தில் பாஜக கூட்டணி ஆட்சிதான் நடக்கிறது. பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்கள் புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தலைவராக, அமைச்சர்களாக உள்ளனர். திராவிட நிலப்பரப்பில் பாஜக நேற்றும் இருந்தது. இன்றும் இருக்கிறது. நாளையும் இருக்கும். அதனை ஒரு நாளும் யாராலும் அகற்ற முடியாது என்பதைதான் கடந்தகால வரலாறுகள் காட்டுகின்றன.

ஒரு தேர்தலில் தோற்றால், அந்த மாநிலத்திலிருந்து ஒரு கட்சி அகற்றப்படும் என்றால், எம்ஜிஆர் உயிரோடு இருக்கும்வரை, எந்தவொரு சட்டப்பேரவைத் தேர்தலில் வெல்ல முடியாத, 1991, 2011 தேர்தல்களில் படுதோல்வி அடைந்த திமுகவை என்ன சொல்வது? பாஜக என்பது தேர்தலில் போட்டியிடுவதற்காக பிறந்த கட்சி அல்ல. இந்த நாட்டை காப்பதற்காக பிறந்த கட்சி. பாஜகவுக்கு கட்சியை விட நாடுதான் முக்கியம்.

1980-ல் மும்பையில் பாஜக தொடங்கப்பட்டபோது அதன் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவின் இரண்டாம் மகாத்மா வாஜ்பாய், 'முதலில் நாடு, பிறகு கட்சி, கடைசியில் தனிநபர்' என்று முழக்கமிட்டார். அந்தப் பாதையில் இருந்து வழுவாமல் பாஜக பயணித்து வருகிறது. எனவே, திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக அகற்றப்பட்டு விட்டது யாரும் அற்ப சந்தோஷம் அடைய வேண்டும். ஏனெனில் பாஜக எழுந்ததே திராவிட நிலப்பரப்பில் இருந்துதான்", என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Bjp Karnataka Election Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment