உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழகத்திற்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டிய கர்நாடக அரசு தற்போது அதை 3 ஆயிரம் அடியாக குறைந்த்தை தொடர்ந்து தமிழக அரசு காவிரி நதிநீர் மேலான்மை வாரியத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
காவிரி நதிநீர் தொடர்பான தமிழகம் – கர்நாடகா இடையே அவ்வப்போது அரசியல் தொடர்பான வாதங்கள், நீதிமன்ற மோதல்கள் தொடர்ந்து வருகிறது. இதில் தமிழகத்திற்கு வரும் செப்டம்பர் 12-ந் தேதி வரை தினமும் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்த்து.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை மதித்து செப்டம்பர் 12ம் தேதி வரை 5,000 கனஅடி வீதம் திறந்துவிட வேண்டிய கர்நாடக அரசு, கடந்த 3 நாட்களில் நீர் திறப்பை 3,000 கனஅடியாக குறைத்தது. இதில் நேற்று (சனிக்கிழமை) காலை, கேஆர்எஸ் மற்றும் கபினி நீர்த்தேக்கங்களில் இருந்து தமிழகத்திற்கு 2,787 கனஅடி வீதம் கர்நாடகா திறந்து விட்டது. கர்நாடக அரசின் இந்த செயல்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு வரும் செப்டம்பர் 12ம் தேதி காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவில் புகார் அளிக்கவுள்ளது.
இதனிடையே காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவின் உத்தரவுகளைப் பொறுத்து, செப்டம்பர் 12 ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 5,000 கன அடி வீதம் திறந்துவிட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கத் தவறியதை உடனடியாக உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவது குறித்து மாநில அரசு முடிவு செய்யும் என்று தமிழக அரசின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. காவிரி நதிநீர் தொடர்பான அடுத்த விசாரணையை செப்டம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
தமிழகத்தில் தற்போது விளைந்த பயிர்கள் தண்ணீர் இல்லாமல் வாடி கிடப்பதால், தமிழக அரசு உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்கள் வலியுறுத்தி வரும் நிலையில், டெல்டா மாவட்டங்களில், வளர்ந்துள்ள குறுவை பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் மழைக்காக வானத்தை எதிர்நோக்கி உள்ளனர்.
மேலும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்துவிடக் கோரி கர்நாடகாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி 8 டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடத்த காவிரிப் படுகைப் பாதுகாப்புக் கூட்டு இயக்கம் முடிவு செய்துள்ளது. மேட்டூர் அணையின் மொத்த கொள்ளவான 93.47 டிஎம்சி அடிக்கு தற்போது 15.70 டிஎம்சி அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து 6,479 கனஅடியாகவும், வெளியேற்றப்படி நீரின் அளவு 6,502 கனஅடியாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரின் அளவு 5,000 கனஅடியில் இருந்து 3,000 கனஅடியாக குறைக்கக் கோரி கர்நாடகா ஏற்கனவே செப்டம்பர் 2ஆம் தேதி மறுஆய்வு மனு தாக்கல் செய்தது. ஆனால் ஏற்கனவே வெளியிட வேண்டிய நீரின் அளவைக் கடுமையாகக் குறைத்துவிட்டதாகவும், மேலும் குறைக்கக் கோருவது நியாயமற்றது என்றும் கர்நாடகாவின் மேல்முறையீட்டை தமிழ்நாடு அரசு எதிர்த்துள்ளது.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 12-ஆம் தேதிக்குள் 5,000 கனஅடி நீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடகா தண்ணீர் திறப்பதை நிறுத்திவிட்டது. இது குறித்து தமிழகம் உடனடியாக உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும். பயிர்களை காப்பாற்ற செப்டம்பர் 21ம் தேதிக்குள் தினமும் குறைந்தது 15,000 கனஅடி வீதம் திறந்துவிடுமாறு கர்நாடகாவிற்கு தலைமை நீதிபதியை வலியுறுத்த வேண்டும். கர்நாடகாவின் நீர்த்தேக்கங்களில் 64 டி.எம்.சி.அடி தண்ணீர் இருப்பதால், தமிழகத்துக்கு 20 டி.எம்.சி.அடி தண்ணீர் பங்கிட முடியும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“