கர்நாடகாவிடம் போதுமான தண்ணீர் இருந்தும் தமிழகத்திற்கு தர மறுக்கிறது என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக புது டெல்லியில் இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்துப் பேசிய பிறகு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
” உச்சநீதிமன்றம் தெரிவித்த முறைப்படி தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீர் குறித்து வலியுறுத்தினோம். தண்ணீர் இருந்தும் திறந்துவிட கர்நாடக அரசு மறுக்கிறது. காவிரி தண்ணீர் விவகாரத்தில் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என மத்திய அரசிடம் கேட்டோம். தமிழகத்தில் பெரும்பகுதிகள் தண்ணீர் பஞ்சத்தால் தவிக்கிறது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்தினோம்.
இது தொடர்பாக நீண்ட சட்ட போராட்டங்கள் நடந்துள்ளன. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் அதை கர்நாடகா அரசு மதிப்பதில்லை. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு ஒருபக்கம் சட்ட போராட்டமும் நடத்தி வருகிறது. காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு வரும் 21ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதற்கு முன்பாகவே காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் நீர் பங்கிட்டு விவகாரத்தை முடிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“