முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என அவரது அண்ணன் மகள் ஜெ. தீபா தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சொத்துக் குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகள், நகைகள் ஆகியவற்றை கர்நாடக அரசு பாதுகாத்து வருகிறது. இவற்றை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். குறிப்பாக, தீபாவின் தரப்பில் இருந்து 400 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்றைய தினம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில், ஜெயலலிதாவின் சொத்துகளை தன்னிடம் ஒப்படைக்க கோரி தீபா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கில் இணைக்கப்பட்டுள்ள சொத்துகளை தவிர மற்றவை குறித்து மேல்முறையீடு செய்ய உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்றும் கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, 11,344 புடவைகள், 750 காலணிகள், 91 கை கடிகாரங்கள், 28 கிலோ எடையிலான தங்க, வைர நகைகள், 700 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை ஜெயலலிதா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.