Jayalalithaa | Karnataka | மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் போது பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி மதிப்புள்ள நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 2024 ஜனவரி 23ஆம் தேதி உத்தரவிட்டது.
அப்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஏற்பட்ட செலவுக்காக கர்நாடகாவுக்கு தமிழ்நாடு அரசு ₹5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
முன்னதாக ஆர்டிஐ ஆர்வலர் டி நரசிம்ம மூர்த்தி என்பவர் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கானது, 32 கூடுதல் நகர சிவில் மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி எச்.ஏ.மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கு விசாரணையின் போது ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகளை ஏலம் விடக் கோரிய மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. மாறாக, பறிமுதல் செய்யப்பட்ட இந்த மதிப்புமிக்க பொருட்களை தமிழக அரசுக்கு மாற்ற உத்தரவிட்டது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பொருள் ஆதாரமாக கருதப்படும் தங்கம் மற்றும் வைர நகைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட மேல் நடவடிக்கைக்கான பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு கொடுக்கப்பட்டது.
இதற்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கர்நாடகா உயர் நீதிமன்றம், “ஜெயலலிதா நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க தடை” விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி கர்நாடகாவில் விசாரணை நடத்தப்பட்டது, இது தொடர்பான அனைத்து ஆதாரங்களும் தற்போது நீதிமன்ற காவலில் கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 27, 2014 அன்று, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ₹100 கோடி அபராதமும் விதித்தது என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“