கர்நாடகாவில் பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பெண் உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கில் ஈரோடு மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண் ரங்கராஜன் (38). கடந்த 2012-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், சத்தீஷ்கர் மாநிலத்தில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது இவருடன் பணியாற்றிய பெண் ஐபிஎஸ் அதிகாரியை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், சமீபத்தில் அருண் ரங்கராஜன் கர்நாடகாவுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில், கலாபுர்கி மாவட்டத்தில் உள்பாதுகாப்பு பிரிவின் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அருண் ரங்கராஜனுக்கு, அங்கு பணியாற்றி வந்த உதவி துணை ஆய்வாளர் சுஜாதா என்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சுஜாதாவின் கணவர் கண்டப்பாவுக்கு இவர்களது பழக்கம் தெரியவர, இது குறித்து அருண் ரங்கராஜனின் மனைவியிடம் தெரிவித்துள்ளார். இதில் கண்டப்பாவும் காவல்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இதனிடையே சுஜாதா உடனான பழக்கம் குறித்து தனது மனைவியிடம் சொன்ன கண்டப்பாவை அருண் ரங்கராஜன் கடுமையாக தாக்கிய நிலையில், இது குறித்து கண்டப்பா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அருண் ரங்கராஜன் தார்வார் மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இந்த புகாரில் கண்டப்பா, ஐபிஎஸ் அதிகாரி தனது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஆனாலும் எஸ்.ஐ சுஜாதா தனது அறிக்கையில், பாலியல் வன்கொடுமைக்கு குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இதனிடையே இவர்களின் விவகாரத்தை தெரிந்துகொண்ட அருண் ரங்கராஜனின் மனைவி அவரை பிரிந்து விவாகரத்து பெற்றுள்ளார். இதனிடையே கடந்த மாதம் இறுதியில், எஸ்.ஐ சுஜாதாவை அழைத்துக்கொண்டு ஈரோடு மாவட்டம் கோபிக்கு வந்த அருண் ரங்கராஜன், இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை சராமாரியாக தாக்கியுள்ளார். இதில் முகத்தில் காயமடைந்த சுஜாதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், இது குறித்து கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஐபிஎஸ் அதிகாரி அருண் ரங்கராஜனை கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனிடையே எவ்வித முன் அனுமதியும் இன்றி அருண் ரங்கராஜன், ஒரு வாரத்திற்கு மேலாக பணிக்கு வரவில்லை என்று கூறப்படும் நிலையில், அவரை இடைநீக்கம் செய்ய கர்நாடகா மாநில காவல்துறை பரிந்துரைத்துள்ளது, ஆனால் அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“