தமிழகத்திற்கு காவிரியை திறந்து விட கர்நாடக அரசு முடிவு... காரணம் இதுதான்!

காவிரியில் வரும் நீரின் அளவு அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருவதால் இந்த முறை தமிழகத்திற்கு நீர் வழங்குவதில் பிரச்னை இருக்காது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு காவிரி கிடைக்குமா? என்று பல ஆண்டுகள் விவசாயிகள் கவலையுடன் காத்திருந்த காலம் அதிகம். வழக்கு தொடரப்பட்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின்பும் கர்நாடக அரசு அந்த தீர்ப்பை புறக்கணித்து டெல்டா விவசாயிகளுக்கு காவிரி நீரை திறந்துவிடாமல் இழுபறி செய்து வந்தது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது.

இதனால், கர்நாடக எல்லையில் உள்ள கபினி அணைக்கு வினாடிக்கு 37 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. அணையின் அதிகபட்ச நீர்தேக்கும் அளவான 84 அடியில் இப்போது 80 அடியாக நீர்மட்டம் உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 35, 000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

cauvery

cauvery

இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வினாடிக்கு 30,000 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. 124 அடியை உச்சநீர்மட்டமாக கொண்ட அந்த அணையில் இப்போது 91 அடிக்கு தண்ணீர் உள்ளது. அந்த அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திற்கு காவிரியில் வரும் நீரின் அளவு அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதே சமயத்தில், நேற்றைய தினம் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி,காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின்படி தமிழகத்திற்கு நீர் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், “ கர்நாடகாவில் பருவமழை தொடங்கி விட்டது. காவிரிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது. எனவே தமிழகத்திற்கு மாதம்தோறும் 10 டிஎம்சி தண்ணீர் வழங்குவதில் சிக்கல் இருக்காது. காவிரி நீர் பங்கீட்டில் எவ்வித சிக்கலும் வராது” என்று தெரிவித்தார்.

×Close
×Close