காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு வரும் தண்ணீர் பாதிக்கப்படும் என்பதால் தமிழக அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்தநிலையில் அண்மையில் கர்நாடக துணை முதல்வரும், நீர்வளத் துறை அமைச்சருமான டி.கே சிவக்குமார் மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதில், மேகதாது அணை கட்டுவது குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கர்நாடக அரசின் இந்த கடிதத்திற்கு தமிழக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தமிழக அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், "மேகதாதுவில் அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்ட முடியாது. மேகதாது விவகாரம் குறித்து இன்று முதலமைச்சர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அதைத் தொடர்ந்து டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரியத்திலும் மேகதாது குறித்து ஆலோசிக்க உள்ளேன்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“