தமிழகத்தில் உச்சத்தை அடைந்துள்ள காவிரி விவகாரம் குறித்து நடிகர் சிம்பு ஏப் 8ம் தேதி செய்தியாளர்களை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது கர்நாடக மக்களிடம் தமிழர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அந்தக் கோரிக்கையில் ஏப் 12ம் தேதி (இன்று) கர்நாடக மக்கள் அனைவரும் தமிழர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்து தங்களின் ஆதரவை அளிக்குமாறு வேண்டிக்கொண்டார். இந்தக் கோரிக்கை கர்நாடக மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.
கடந்த ஏப் 8ம் தேதி சிம்பு பேசுகையில், “கர்நாடகாவில் இருப்பவர்கள் தாயுள்ளம் கொண்டவர்கள் தானே. அந்த மக்கள் கூறட்டும் தண்ணீர் கிடையாது என்று. அப்போது நாம் இன்னும் தீவிர போராட்டம் நடத்தலாம். ஆனால் எனக்கு நம்பிக்கை உள்ளது. நிச்சயம் மனித நேயத்திற்காக நாம் ஒன்றிணைவோம். கர்நாடக மக்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள். வரும் ஏப் 12ம் தேதி மதியம் 3 மணியிலிருந்து 6 மணிக்குள் அனைத்து மக்களும் அங்கு வாழும் தமிழர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்து ‘எங்களுக்குக் காவிரி தண்ணீர் தர விருப்பம்’ என்று கூறி வீடியோ அனுப்புங்கள். அதை இங்குள்ள அனைவரும் பார்க்கட்டும். மத்திய அரசும் பார்க்கட்டும்” என்ற கோரிக்கையை சிம்பு முன்வைத்தார்.
,
தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவிலும் இந்தப் பேட்டி வைரல் ஆனது. மனித நேயம் கொண்ட மனிதர்களாக நாம் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கர்நாடக மக்கள் கூறி வருகின்றனர். மேலும் சிம்புவிற்கு பெரும் ஆதரவு குவிந்து வருகிறது. கர்நாடகத்தில் வசிக்கும் பலர், அவர்களுடன் வசிக்கும் தமிழர்களுக்கு தண்ணீர் வழங்கி ஆதரவு அளித்து வருகின்றனர். குறிப்பாக சிம்புவின் வேண்டுகோளுக்கு ஏற்ப தண்ணீர் அளிப்பதை வீடியோ எடுத்து இணையதளத்தில் பகிந்து வருகின்றனர்.
இந்த நிகழ்வால் ட்விட்டரில் இன்று, #UniteforHumanity என்ற ஹாஷ்டாக் டிரெண்டாகி வருகிறது.