கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் 104 வயது முதியவர் தனது தபால் வாக்கைப் பதிவு செய்துவிட்டு சில நாட்களில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
நாட்டில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் முதியவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதை தவிர்க்கும் வகையில் அவரவர் வீட்டிற்கே சென்று தபால் வாக்கு பதிவு செய்யும் நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி முதல் கட்டமாக தமிழகத்தில் ஏப்.19-ம் தேதி நடைபெறும் வாக்குப் பதிவினையொட்டி கடந்த 6-ம் தேதி தமிழகத்தில் உள்ள முதியவர்களை கணக்கெடுத்து அந்தந்த தொகுதி வாரியாக தேர்தல் அலுவலர்கள் வீடு வீடாக சென்று தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.
அந்தவகையில், கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவை தொகுதியில் வசித்து வந்த பரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா என்ற 104 வயது முதியவரை சந்தித்த நடமாடும் தேர்தல் வாக்கு சேகரிக்கும் குழுவினர், கடந்த 06-ம் தேதி அன்று அவரது தபால் வாக்கை அவரது வீட்டிற்கு சென்று பதிவு செய்தனர்.
இந்நிலையில், வயது மூப்பு காரணமாக சுப்பையா உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்றி விட்டு முதியவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“