சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, ’டெங்கு, மலேரியா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக்கூடாது ஒழித்து கட்ட வேண்டும். அதைப்போல தான் இந்த சனாதனமும். அதை எதிர்க்க கூடாது; ஒழிக்க வேண்டும்’ என்று உதயநிதி பேசியிருந்தார்.
சனாதனத்துக்கு எதிராக உதயநிதி தெரிவித்த கருத்துக்களுக்கு பாஜக கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறது. மேலும், டெல்லி, பீகார், உ.பி. மாநிலங்களில் உதயநிதி மீது புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
பரமஹம்ச ஆச்சார்யா எனும் அயோத்தி சாமியார், உதயநிதி தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
என் தலையை சீவ 10 கோடி ரூபாய் எல்லாம் வேண்டாம். 10 ரூபாய் சீப்பு போதும் என உதயநிதி ஸ்டாலின் சாமியார் பரம்ஹன்ஸாவை கலாய்த்த நிலையில், உதயநிதியின் தலைக்கு பத்து கோடி ரூபாய் பத்தாது என்றால், கூடுதலாக தரவும் தயார் என்று அயோத்தி சாமியார் மீண்டும் மிரட்டினார்.
இந்த சம்பவங்களால் அமைச்சர் உதயநிதியின் வீட்டிலும், அலுவலகத்திலும் போலீஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, அயோத்தி சாமியார் மிரட்டலுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியாரை கைது செய்ய முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறியுள்ளார்.
மயிலாடுதுறையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் சிதம்பரம் எம்.பி.,’எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. சனாதனம் என்பது சமுதாயத்தில் உள்ள சாதியை ஏற்றத்தாழ்வுகளை மட்டும் தான் குறிக்கிறது. இறை வழிபாட்டிற்கு எதிராக சனாதன ஒழிப்பு மாநாட்டில் யாரும் பேசவில்லை. சாதிகள் இல்லாமல் சமுதாயம் அமைய வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு ஆதரவு அளிக்கிறேன் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“