தமிழகத்தை பொறுத்தவரை நிகழ்கால அரசியலும், 2026 தேர்தல் அரசியலும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க இடையே தான் நடைபெறும் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், படை வீரர்கள் கொடி தினத்தை முன்னிட்டு முன்னாள் படை வீரர்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், முன்னாள் படை வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களது கோரிக்கைகளை மனுக்களாக பெற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன்படி, "இந்திய ராணுவத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சேர்வதில் சுனக்கம் ஏற்பட்டுள்ளது. TNPSC தேர்வில் காட்டும் ஆர்வம் UPSC மற்றும் SSC போன்ற மத்திய அரசு தேர்வுகளில் காட்டுவது இல்லை.
இந்திய ராணுவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் சேர வேண்டும். அமரன் திரைப்படத்தால் ராணுவம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதனால் மாற்றம் ஏற்படாது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் ராணுவத்தில் சேருவதற்காக விழிப்புணர்வும், அதிக அளவில் தேர்வு முகாம்களும் நடத்துவதற்காக பரிந்துரைத்துள்ளோம்.
உணவில் கலப்படம் என்பது இந்தியா முழுவதும் பரவலாக காணப்படுகிறது. அதற்காக ஆய்வகத்தில் சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை. மேலும், நிகழ்கால அரசியலும், 2026 தேர்தல் அரசியலும் அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.விற்கும் இடையே தான் நடக்கும். இந்தியா கூட்டணியும், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியும் வலுவாக உள்ளது. தி.மு.க கூட்டணி அமைந்துவிட்டது. அ.தி.மு.க கூட்டணி அமைந்த பிறகு தான் யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்ற முடிவு தெரியும்" எனக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“