Advertisment

'இந்தியாவின் சாபக்கேடு சாதி': கார்த்தி சிதம்பரம் ட்வீட் பின்னணி என்ன?

திருமண வரன் தேடல் அறிவிப்புகளில் சாதி குறிப்பிட்டு விளம்பரம்; சாதி இந்தியாவின் சாபக்கேடு என கார்த்தி சிதம்பரம் சாடல்

author-image
WebDesk
New Update
Tamil News, Tamil News Today Latest Updates

Tamil News Headlines LIVE

Karthi Chidambaram tweets caste is the curse of india to pointing matrimony advertisement: திருமண வரன் தேடல் விளம்பரத்தில் சாதி குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டி, சாதி இந்தியாவின் சாபக்கேடு என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

இந்தியாவில் பெரும்பாலும் திருமணங்கள் சொந்த உறவுகளுக்குள் அல்லது சொந்த சாதிக்குள்ளே நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக சாதிமறுப்பு மற்றும் சாதி கடந்த திருமணங்கள் அதிகரித்து வருகிறது. இந்த திருமண வரன் தேடல்களை பொறுத்தவரை உறவுகளுக்குள் எனும்போது அவர்களுக்காகவே பேசி முடித்துக் கொள்வார்கள். அதைதாண்டி வெளியில் செல்லும்போது, முன்னர் புரோக்கர்கள் மூலம் வரன் தேடி வந்தனர். அதன்பிறகான காலகட்டத்தில் நாளிதழ்களில் விளம்பரங்கள் கொடுப்பதன் மூலம் வரன் தேடி வருகின்றனர்.

இன்றைய இணைய காலகட்டத்தில் வரன் தேடலுக்கு இணையதளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் ஓவ்வொரு சாதிக்கும் தனித்தனி இணையதளம் இருப்பது, இந்தியர்கள் இந்த தொழில்நுட்ப யுகத்திலும் இன்னும் சாதியைக் கடக்கவில்லை என்பதை உணர்த்துகிறது.

இதற்கிடையில் வரன் தேடல் அறிவிப்புகளில், குறிப்பிடப்படும் நிபந்தனைகள் மற்றும் எதிர்ப்பார்ப்புகள் சில சமயம் சுவாரஸ்யமாக இருக்கும். இவற்றில் இணையதளங்களில் வெளியாகும் வரன் தேடல்கள் பொது பார்வைக்கு வருவதில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் நாளிதழ்களில் வெளியாகும் வரன் தேடல் அறிவிப்புகள் அனைவரின் கவனத்தையும் பெறுகின்றன.

அந்தவகையில் வெளியான ஒரு வரன் தேடல் அறிவிப்பைக் குறிப்பிட்டுதான் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், சாதி இந்தியாவின் சாபக்கேடு என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: எஸ்.பி.வேலுமணி ஊழல் வழக்கு; மேயர், அதிகாரிகளை சேர்க்க கோரிய மனு தள்ளுபடி

ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான அந்த வரன் தேடல் அறிவிப்பில், பீகாரில் பிராமணச் சமூகத்தைச் சேர்ந்த அபிநவ் குமார் என்ற 33 வயது பல் மருத்துவருக்கு பெண் தேடி வெளியான விளம்பரத்தில், பிராமண சமுதாயத்தை சேர்ந்த பெண் தேவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், பெண் பார்ப்பதற்கு அழகாகவும், லட்சணமாகவும், நேர்மையானவராகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும், அன்பானவராகவும், அரவணைக்கக்கூடியவராகவும், துணிச்சலானவராகவும், பலமானவராகவும், பணக்காரராகவும் இருக்க வேண்டும். குறிப்பாக இந்தியாவின் மீது அதீத தேசபக்தி உடையவராகவும் நாட்டின் இராணுவம் மற்றும் விளையாட்டுத் துறையின் திறனை மேம்படுத்துவதில் விருப்பம் உடையவராகவும், அதில் தீவிரமானவராகவும் அதே நேரம் இரக்கமுடையவராகவும் இருக்க வேண்டும். குழந்தை வளர்ப்பில் திறன்மிக்கவராகவும் நன்றாக சமைக்கத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். அவர் இந்திய இந்து பிராமண சமுதாயத்தை சேர்ந்த வேலை பார்க்கக் கூடிய (மணமகன் தற்போது வேலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது) பீகார் அல்லது ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குறிப்பாக ஜாதக ஜோதிட பொருத்தங்கள், 36 குணங்கள் ஒத்துப்போக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரன் தேடும் அறிவிப்பு சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பைப் பகிர்ந்து தான் கார்த்தி சிதம்பரம், ”சாதி இந்தியாவின் சாபக்கேடு” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Karti Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment