சட்டவிரோதமாக வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகளை மறைத்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், குளோபல் அட்வைஸரி சர்வீசஸ் லிமிடெட் என்ற நிறுவனம் சார்பில் ப.சிதம்பரம் மனைவி நளினி, மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் பெயரில் வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கியதாக கூறப்படுகிறது. இங்கிலாந்தில் 6 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பிலும், அமெரிக்காவில் 3 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பிலும் சொத்து வாங்கி அதனை மறைத்ததாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து மூன்று பேரும் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மேலும் சொத்துகளை வாங்கியது குறித்தும், வங்கிக் கணக்குகள் குறித்தும் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸில் கூறப்பட்டு இருந்தது. எனவே அவர்கள் சார்பில் வருமானவரித் துறைக்கு விளக்க கடிதமும் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து கறுப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், வருமானவரித் துறை புகார் மனு தாக்கல் செய்தது.
இதனை ஏற்ற சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர்விழி, குற்றம்சாட்டப்பட்ட நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி மற்றும் செஸ் குளோபல் நிறுவனத்தின் இயக்குநர் ஆகியோர் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது. இதனையடுத்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 3 பேரும் ஆஜராகியுள்ளனர்.